திருவண்ணாமலையில் உள்ள லாட்ஜில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலைக்கு முயன்று, கணவன், மனைவி இறந்தனர், அவர்களது மகன் மட்டும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டம் முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 45). டெய்லர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஹேமாமாலினி (40), மகன் பிரனேஸ்வரன் (17) பிளஸ்-2 படித்து வருகிறார். இன்று அதிகாலை 3 பேரும் திருவண்ணாமலை வந்தனர். போளூர் ரோட்டில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர். இன்று காலை 7 மணியளவில் லாட்ஜில் வேலை செய்பவர்கள் டீ வேண்டுமா என கேட்பதற்காக அறையின் கதவை தட்டினர். நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மானேஜருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். லாட்ஜிக்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சேகர், ஹேமாமாலினி விஷம் குடித்து இறந்த நிலையில் கிடந்தனர். பிரனேஸ்வரன் வாயில் நுரை வந்த நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீசார் உடனடியாக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சேகர், ஹேமா மாலினியின் பிணங்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேகரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். லாட்ஜில் சோதனையிட்ட போது அங்கு டைரி ஒன்று சிக்கியது. அதில் எழுதியுள்ள சேகர் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டையில் பைனான்சியர் ஒருவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தேன்.அதற்கு வட்டியும் சேர்த்து ஒரு லட்சம் வரை கட்டிவிட்டேன். இருந்தாலும் மேலும் பணம் கேட்டு 4 பேர் கும்பல் என்னை மிரட்டினர். இதனால் செய்வதறியாது தவித்த நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply