shadow

எதிர்ப்பு, வரவேற்புகளுக்கு இடையே நிறைவேறியது சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறைக்கும் சட்ட திருத்த மசோதா
menaka gandhi
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்ட இளம் குற்றவாளிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் தண்டனை முடிந்த இளம் குற்றவாளியை விடுதலை செய்வதை தவிர சட்டத்தில் வேறு இடம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. எனவே சிறார் குற்றவாளியின் வயது வரம்பை குறைக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தது. இந்நிலையில் சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

முன்னதாக இந்த மசோதா மீதான  விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பலர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அமைச்சர் மேகனா காந்தி இந்த சட்டமசோதாவை ஆதரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசியதாவது: “மிகக் கொடுங் குற்றம் புரியும் சிறார்களை அடைத்து வைக்க போர்ட்டல்ஸ் என்ற தனி இடம் உருவாக்கப்படும். அவை தற்போது இல்லை, புதிதாக உருவாக்கப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட சிறார்கள், 21 வயது ஆகும் வரை இந்த போர்ட்டல்ஸ்களில் அடைத்து வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, அவர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அவர்களது நடத்தை பரிசீலிக்கப்பட்டு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குணம் இருந்தால் அவர்களது தண்டனைக் காலம் வரை அவர்கள் அந்த போர்ட்டல்ஸ்களிலேயே அடைத்து வைக்கப்படுவார்கள்.

தற்போதிருக்கும் சட்டம், சிறார் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் வகையிலேயே உள்ளது. சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது மிக வேகமாக அதிகரித்துள்ளது. சிறார்கள் காவல்நிலையங்களுக்கு சென்று நாங்கள் கொலை செய்து விட்டோம், எங்களை சிறார் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்புங்கள்’

சிறார்கள், சிறார்களுக்கு எதிராக குற்றங்களை இழைக்கும் போது, நாம் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவோமா? அல்லது குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவோமோ? என்று கேள்வி எழும்புகிறது’ இவ்வாறு மேனகா காந்தி பேசினார்.

இந்த மசோதா குறித்து திமுக எம்பியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி பேசியபோது, “சிறார் நீதி சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, விரிவாக விவாதம் நடத்த வேண்டும். சிறார்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்வை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 16 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களும் வயது வந்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்பதற்கான சட்டத் திருத்த மசோதாவிற்கு அ.இ.அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களின் குடும்பப் பின்னணியை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

விவாதத்தின் முடிவில், சிறார் நீதி சட்டத்திருத்த மசோதா, உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம்  நிறைவேறியது. சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பு 18லிருந்து 16ஆக குறைக்க இந்த மசோதா உதவுகிறது. இனி 16 வயதுக்கு மேற்பட்டோர் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குற்றவாளிகளாக கருதப்படுவர்.

English Summary: Juvenile Justice Bill Passed In Rajya Sabha

Leave a Reply