shadow

கேரள முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதியின் திடீர் விருப்ப ஓய்வு.

umman chandyகேரள முதல்வர் உம்மன் சாண்டி அவர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிரடியாக குற்றஞ்சாட்டியதை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி கேரள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் முதல்வர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு நேற்று கேரள ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்தது. இதனால் உம்மான்சாண்டிக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கேரள முதல்வர் மீது வழக்கு தொடர நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து நேற்று உம்மன்சாண்டி தரப்பில் கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், “பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு தங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தவறானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரணை செய்த ஐகோர்ட் நீதிபதி பி.உபைது, “திருச்சூர் ஊழல் தடுப்பு நீதிபதி தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டுள்ளார். எனவே, அந்த நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு 2 மாத காலம் தடை விதிக்கப்படுகிறது. அதிகார வரம்பை மீறிச் செயல்பட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப் பரிசீலிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, ‘சூரிய மின்தகடு முறைகேடு வழக்கில் என் மீது குற்றம்சாட்டப்பட்டது அரசியல் சதி என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்போது ஐகோர்ட் விதித்துள்ள தடை மூலம் நான் கூறியது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.வாசன் விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்துள்ளார். ஊழல் தடுப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த சில மணி நேரத்திலேயே அவர் இவ்வாறு முடிவெடுத்தார். இதுகுறித்து ஐகோர்ட் பதிவாளரிடம் அனுமதி கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Chennai Today News: Judge who ordered FIR against Kerala CM Chandy seeks voluntary retirement

 
 

Leave a Reply