இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு இந்தியக் கடற்படை தொழில்நுட்ப பட்டப்படிப்பை வழங்குவதற்கான திட்டத்துக்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

’இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்தும் தமிழ்நாடு மற்றும் தமிழர்களின் உணர்வுகள் குறித்தும் கடந்த 2 ஆண்டுகளாக நான் உங்களுக்கு பல தடவை கடிதங்கள் எழுதி தமிழர்களின் உணர்வுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறேன்.

சிறுபான்மை தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் கடைபிடிக்கப்படும் பாரபட்சமான போக்கை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கெனவே 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இது தவிர, இன்னொரு கடுமையான பிரச்சனை என்னவென்றால், தற்போதைய இலங்கை அரசின் நியாயமற்ற போக்கை வெளிக்காட்டும் வகையில் இலங்கை கடற்படையினர் அப்பாவி தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கியும், அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கைப்பற்றியும் வருகிறார்கள். தமிழக மீனவர்கள் காலவரையின்றி இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக அவர்களது வாழ்வாதாரம் இழக்கப்பட்டு குடும்பத்தினர் பெரும் துயரத்திற்கும், மன உலைச்சலுக்கும் உள்ளாகி இருக்கிறார்கள்.

எனவே தமிழ்நாட்டில் எல்லா தரப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழமான உணர்வு மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கு ஏற்ப இலங்கையில் நடந்த இறுதிக்கட்டபோரின் போது நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்கள் மற்றும் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு தற்போதைய இலங்கை அரசை பொறுப்பாக்க வேண்டியது அவசியமாகும். மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் நடுக்கடலில் மீனவர்கள் ஈவு இரக்கமின்றி கடத்தப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகிறது. இந்த பின்னணியில் இலங்கையை நட்பு நாடு என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் 27.3.2013 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்களின் உணர்வை வெளிக்காட்டும் வகையில் கடந்த 16.7.2012, 25.8.2012, 28.8.2012 மற்றும் 8.6.2013 ஆகிய நாட்களில் நான் எழுதிய கடிதங்களை தயவு செய்து கவனத்தில் கொள்ளுங்கள் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply