shadow

உலக சிக்கன தினத்தை முன்னிட்டு தமிழக மக்களிடம் வேண்டுகோள் விடுத்த ஜெயலலிதா.
jayalalitha
அக்டோபர் 30ஆம் தேதி அதாவது நாளை உலக சிக்கன தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடவுள்ள நிலையில் ஒவ்வொருவரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

“மக்களிடையே சிக்கன உணர்வினை ஏற்படுத்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ம் நாள் உலக சிக்கன நாளாகக் கொண்டாடப்படுகிறது.

‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு’ என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை  ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை, பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.

மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும்,  எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.

‘சிறுகக் கட்டி பெருக வாழ்’ என்பதனை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்புக் கணக்கினைத் துவக்கிட வேண்டுமென இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English Summary: Jayalalitha statement about World Savings Day

Leave a Reply