தமிழகத்தில் சமீபமாக மீண்டும் மின் வெட்டு பிரச்னை தலைதூக்கியுள்து. இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 4-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி. மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. பெருமாளின் மனைவி சரோஜா போட்டியிடுகிறார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்தார். இதற்காக அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 9.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்தை 9.47 மணிக்கு சென்றடைந்தார். இதையடுத்து அங்கிருந்து முதலமைச்சர் ஜெயலலிதா காலை 10.17 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலம் புறப்பட்டார். சேலம் உடையாப்பட்டி ஹோலிகிராஸ் பள்ளி மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் இறங்கினார். அங்கு அவரை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில், முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜாவை ஆதரித்து திறந்த வேனில் நின்றவாறு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.

நான் மூன்றாவது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மக்களை சரியான முறையில் சென்றடைந்து வருகின்றன. அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 10 ரூபாய்க்கு 1 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கும் அம்மா குடிநீர்த் திட்டம்; முதன் முறையாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3,898 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிவாரண உதவிகள்; 50 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டம் என உங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பல்வேறு நலத் திட்டப் பணிகளை எனது தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவற்றின் பயன்களை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் எல்லாம் பெற்று வருகிறீர்கள்.

மின்பற்றாக்குறை
மின்சாரத்தைப்பொறுத்தவரையில், தேவைக்கேற்ப மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு துரிதமாக எடுத்து வருகிறது. மின் கட்டமைப்பினை பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எனது அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக மின்வெட்டு படிப்படியாக குறைந்து, கடந்த ஜூலை மாதம் முதல் மின் நிலைமை முழுவதும் சீர் செய்யப்பட்டு மின்வெட்டே இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டது.

கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட மின்வெட்டே இல்லை என்ற நிலைமையை மிகவும் சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறோம்; வேறு எந்த அரசும் செய்திருக்க முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம் என்று பெருமிதத்தோடு நான் தெரிவித்தேன்.

சொல்லி வைத்தாற்போல் இதற்கு அடுத்த வாரம் முதலே பல மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத்தான் தி.மு.க-வினர் இந்த இடைத்தேர்தல் பிரசாரத்தில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். “மின்வெட்டே இல்லை” என்று முதலமைச்சர் பெருமைபட்டார், சட்டப்பேரவையிலும் அறிவித்தார். ஆனால் அவர் அறிவித்த சில நாட்களிலேயே மின்வெட்டு மீண்டும் ஏற்பட்டு உள்ளதே என்று குதர்க்கமாக பேசுகிறார்கள்.

இதிலிருந்து இந்த மின் பற்றாக்குறை இயல்பாக ஏற்பட்டது அல்ல என்ற எண்ணமும், தி.மு.க-வின் மறைமுக ஆலோசனையின் பேரில் மத்திய அரசு செய்யும் சதித் திட்டம் தானோ என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது. மத்திய அரசின், இந்த சூழ்ச்சியை எதிர்கொண்டு, மின் நிலைமையை, வெற்றிகரமாக சமாளிப்போம் என்பதை, உங்களுக்கு நான், தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா விதத்திலும், எல்லா வழிகளிலும், கடந்த 2 ஆண்டுகளாக, தமிழ்நாட்டை, தமிழக மக்களை, வஞ்சித்த மத்திய அரசை, எதிர்கொண்டு தான், எனது தலைமையிலான அரசு, அளப்பரிய சாதனைகளை, புரிந்துள்ளது. பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை, செயல்படுத்தி வருகிறது.

இதே போன்று, தற்போது மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சரி செய்து, மின்வெட்டே இல்லாத ஒளிமயமான, சுபிட்சமான நிலைமையை விரைவில் உருவாக்கியே தீருவேன் என்பதை இந்தத் தருணத்தில் நான் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் முதலமைச்சர் ஜெயலலிதா.

Leave a Reply