shadow

jayalalithaசொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பொறுபேற்ற ஜெயலலிதா, தற்போது உடல் நலமின்றி இருப்பதாகவும், தன்னுடைய சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனேகமாக அவர் சிங்கப்பூர் அல்லது அமெரிக்காவுக்கு செல்லக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்தே உடல் நலமின்றி காஅப்படும் ஜெயலலிதா, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே கலந்து கொண்டார். இப்தார் நோன்பு நிகழ்ச்சி ரத்து, கோட்டையில் இருந்தே மெட்ரோ ரயில் திறப்பு விழா நிகழ்ச்சி ஆகியவைகளுக்கும் அவரது உடல்நிலையே காரணம் என கூறப்பட்டது.

முதல்வரால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை  என்றும், இதனால்தான் அவரது பதவியேற்பு விழாவில் சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.

இரண்டு ‘கால்களின் மூட்டுகளும் தீராத வலியால் அவரை வேதனைப்படுத்துகின்றன. அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் செய்கிறார். ஆனாலும் வலி குறையவில்லை. நாளுக்குநாள் கூடிக்கொண்டுதான்போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்தான் ஜெயலலிதாவுக்கு சமீப நாட்களாக இந்த மூட்டு வலி மிக அதிகமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தை கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதுகுறித்த செய்திகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஒரு கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேசினார்.

அப்போது, “தயவு செய்து நீங்கள் (ஜெயலலிதா) ஓய்வெடுத்து உங்கள் உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் என்பவர், ஒரு நாட்டுக்கு ரகசியமானவராக இருக்கக் கூடாது. பகிரங்கமாக, வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று கருணாநிதி பேசியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில், சிகிச்சைக்காக  ஜெயலலிதா வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அநேகமாக சிங்கப்பூர் அல்லது அமெரிக்கவுக்கு அவர் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஜெயலலிதா தனது மருத்துவர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் பயண தேதி உள்ளிட்ட விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இன்னும் சில தினங்களில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply