தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வெளியேறப்போகிற அரசிடம் இனி எந்த உதவியும் கேட்க மாட்டோம். ஜூன் மாதத்தில் புதிய அரசு பதவியேற்றவுடன்  தமிழகத்திற்கு தேவையானதை கேட்போம் என்று கூறினார்.

கேள்வி:– அ.தி.மு.க. தேர்தல் பணி தொடங்கி ஓராண்டு ஆகிறது. இப்போது வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டீர்கள். தேசிய கட்சிகள் இன்னும் கூட்டணி அமைக்க திண்டாடுகிறதே?

பதில்:– இதைப்பற்றி நான் கருத்து சொல்வதை விட அவர்களிடமே கேட்க வேண்டும்.

கேள்வி:– இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உங்கள் கூட்டணியில் உள்ளது. வேறு கட்சி வர வாய்ப்பு உள்ளதா?

பதில்:– எங்களுக்கு இந்த கூட்டணியே போதும்,

கேள்வி:– உங்கள் பிரசாரத்தில் எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?

பதில்:–எங்களது தாரக மந்திரமான அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவையே முக்கிய குறிக்கோள். இது தவிர தேர்தல் அறிக்கையில் எங்கள் பிரசார நோக்கங்கள் பற்றி விரிவாக சொல்வோம்.

கேள்வி:– உங்கள் பிறந்த நாள் செய்தியாக மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்:– அமைதி, வளம், வளர்ச்சி காண தமிழக மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் எங்களது தாரக மந்திரத்திற்கு ஒத்துழைப்பு கோருகிறேன்.

கேள்வி:– தேசிய அளவில் இடது சாரி உள்பட 16 கட்சிகள் சேர்ந்து ஒரு வலுவான அணி உருவாகி உள்ளதே. அவர்களுக்கு ஆதரவாக வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்வீர்களா?

பதில்:– எனது கவனம் தமிழ்நாடு பற்றிதான். தமிழ்நாடு, புதுவை உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறுவதுதான் எங்களது குறிக்கோள்.

கேள்வி:– பெரும்பாலான கருத்து கணிப்புகளில் 3–வது அணிதான் பெருமளவு வெற்றிபெறும் என்று தெரிவிக்கின்றனவே?

பதில்:– கண்டிப்பாக. தேர்தல் முடிந்ததும் அதை தெரிந்து கொள்வீர்கள்.

கேள்வி:– ராஜீவ் கொலை வழக்கில் மேலும் 4 பேரை விடுதலை செய்யக்கூடாது என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளதே?

பதில்:– இது எதிர்பார்த்துதான் அவர்கள் கோர்ட்டுக்கு செல்வார்கள் என்பது தெரியும். சட்டப்படி என்ன செய்ய முடியுமோ அதை ஆராய்ந்து செய்வோம்.

கேள்வி:– சீமாந்திரா மாநிலத்துக்கு தனி நிதி உதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுபோல் தனி நிதி உதவி திட்டம் வேண்டும் என்று பீகார் உள்பட மேலும் சில மாநிலங்கள் கேட்டுள்ளது. நீங்களும் நிதி வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் முன் வைப்பீர்களா?

பதில்:– இந்த அரசிடமா? இந்த அரசு வெளியேறப் போகிற அரசு. புதிய அரசு ஜூன் மாதத்தில் அமையும். அப்போது பார்த்துக் கொள்வோம்.

Leave a Reply