shadow

metro trainசென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். முதல் ரயில் இன்று நண்பகல் 12.09 மணிக்கு ஆலந்தூரில் இருந்து கிளம்பி, கோயம்பேடு ரயில் நிலையத்தை 12.33 மணிக்கு வந்தடைந்தது. முதல் ரயிலில் அரசு மற்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் பயணம் செய்தனர்.

சென்னை நகரின் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரூ.14 ஆயிரத்து 600 கோடி மதிப்பில் சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் வழித்தடமான வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.05 கிலோ மீட்டர் தூரத்துக்கும், 2வது வழித்தடமான சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 22.50 கிலோ மீட்டர் தூரத்துக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுரங்கப்பாதையில் 16 ரயில் நிலையங்களும், உயர்த்தப்பட்ட பாதையில் 16 ரயில் நிலையங்கள் என 32 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ்குமார் மிட்டல் ஆய்வு செய்து, பயணிகள் சேவையை தொடங்குவதற்கான சான்றிதழை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, ஆலந்தூர்-கோயம்பேடு இடையே இன்று முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்தார். மேலும் முதல்வர் அவர்கள் கோயம்பேடு, கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் பணிமனை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply