shadow

jayaஅதிமுக அமைப்புகளுக்கு 14 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதா சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனவுடன் நடைபெற இருக்கும் முதல் உள்கட்சி தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவரது ஒப்புதலுடன் அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக சட்ட திட்ட விதி 30, பிரிவு 2-இன் படி, கட்சி அமைப்புகளின் பொதுத் தேர்தலை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறைக்கேற்ப, கடந்த 29.8.2014 அன்று கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்புக்கான தேர்தல் நடந்து முடிந்தது.

அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உள்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் நகரங்கள், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும் ஒன்றியம், நகரம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதி கழக நிர்வாகிகளுக்கான தேர்தல்கள் 5 கட்டங்களாகவும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் 2 கட்டங்களாகவும் கழக அமைப்புகள் செயல்பட்டுக்கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களின் கிளை, வார்டு, வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் ஒரு கட்டமாகவும் மாநிலக் கழக நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தொகுதி-பகுதி நகர கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான தேர்தல்கள் ஒரு கட்டமாகவும் என மொத்தம் 14 கட்டங்களாக நடைபெறவுள்ளன என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்தத் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply