நாளை ஓணம் பண்டிகை. ஜெயலலிதா, விஜயகாந்த் வாழ்த்து

onamகேரளாவில் நாளை ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. மலையாளம் மொழி பேசும் மக்களின் முக்கிய திருவிழா ஓணம் என்பதும் தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஓணம் பண்டிகையை ஒட்டி தமிழக தலைவர்கள் கேரள மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில், “”பாரம்பரிய சிறப்பு மிக்க பண்டிகையான ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும்  மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்திட வாமன அவதாரம் பூண்ட திருமால், அச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். அதற்கு மகாபலி சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த திருமால், மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய தலையை காண்பிக்க, திருமால் மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து பாதாளத்திற்குள் வீழ்த்தினார்.

அச்சமயம் ஆண்டுதோறும் தன்னுடைய மக்களை காண வேண்டுமென்ற மகாபலி சக்கரவர்த்தியின் விருப்பத்தினை திருமால் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

சாதி, மத பேதமின்றி மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் வாயில்களில் வண்ணப் பூக்களால் அத்தப்பூக் கோலமிட்டு, புத்தாடை அணிந்து, ஓண விருந்துண்டு, மோகினி ஆட்டம், கோலாட்டம் போன்ற நடனங்களை ஆடி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

திருவோணத் திருநாளான இந்நன்னாளில், இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒரு  முறை எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்” இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் விஜய்காந்த் விடுத்துள்ள அறிக்கையில், “திராவிடநாட்டின் அங்கமான கேரள மக்கள் திருவோணத்தையொட்டி அத்திப்பூ கோலமிட்டு சிறப்பாக கொண்டாடும் பாரம்பரியமிக்க  பண்டிகை ஓணம் பண்டிகையாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படும் இதை “அறுவடை திருநாள்” என்றும் சொல்வார்கள். இந்த பண்டிகையை சமுதாயத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற பேதமின்றி, அனைவரும் ஒன்று கூடி முக்கிய திருவிழாவாக நாளை (28.08.2015) கொண்டாடுகின்றனர்.
       
மகாபலி சக்கரவர்த்தியின் ஆட்சியிலே சண்டை, சச்சரவு, துன்பம் ஏதுமின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாகவும், அந்த மன்னன் வரம்பெற்று திருவோணத்தன்று நாட்டுமக்களை சந்திக்க வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த நன்நாளையே ஓணம் பண்டிகை என்றழைத்து கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த இனிய நன்னாளில் கேரள மக்கள் அனைவரும் எல்லா நலனும் பெற்று, எல்லா வளமும் பெற்று, நல்வாழ்வு வாழவேண்டும் என தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *