shadow

சிறைத்துறை அதிகாரி வேலை வேண்டுமா?

jailகாவல்துறைப் பணியைப் போன்று சிறைத்துறைப் பணியும் சீருடைப் பணியாக கருதப்படுகிறது. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 மகளிர் சிறப்பு சிறைகள், 95 கிளை சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் உள்ளன. இதில், வார்டர் கிரேடு-2, வார்டர் கிரேடு-1, தலைமை வார்டர், உதவி ஜெயிலர் (உதவி சிறை அதிகாரி), துணை ஜெயிலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், டிஐஜி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும் அலுவலர்களும் பணியாற்றி வருகிறார்கள்.

சிறைத்துறை நிர்வாக பிரிவில் ஆரம்ப நிலை பதவியான உதவி சிறை அதிகாரி (அசிஸ்டென்ட் ஜெயிலர்) பணியிடங்கள் (நேரடி நியமனம்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்படுகின்றன.

தகுதி அடிப்படையில்

நேரடி உதவி ஜெயிலர் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்துவந்த நிலையில், தற்போது அப்பணியில் 104 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உதவி ஜெயிலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு ஏதும் இல்லை. உதவி ஜெயிலர் பணிக்கு குறிப்பிட்ட சில உடற்தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, உயரம் குறைந்தபட்சம் 168 செ.மீ. இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் என்றால் 160 செ.மீ. போதும். மார்பளவு குறைந்தப்பட்சம் 86 செ.மீ. வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டியது அவசியம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் எனில் மார்பளவு 79 செ.மீ. இருந்தால் போதும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். உயரத்தைப் பொருத்தமட்டில், பெண்கள் என்றால் 155 செ.மீ. இருக்க வேண்டும் எஸ்சி, எஸ்டி வகுப்பு பெண்களாக இருப்பின் 150 செ.மீ. இருந்தால் போதுமானது.

தயாராவது எப்படி?

உதவி ஜெயிலர் பணிக்கு நல்ல கண் பார்வை அவசியம். தகுதியுள்ள நபர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத்தேர்வில் 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தலா 300 மதிப்பெண். முதல் தாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள், இந்தியா மற்றும் தமிழகத்தின் சமூக, பொருளாதார பிரச்சினைகள், சமகாலச் செய்திகள் ஆகியவற்றிலிருந்து 200 வினாக்கள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும்.

அதேபோல், 2-ம் தாளில் பொதுஅறிவுப் பகுதியில் 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 கேள்விகளும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 80 மதிப்பெண். கல்வித்தகுதியும் உரிய உடற்தகுதியும் கொண்ட பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தைப் (www.tnpsc.gov.in)பயன்படுத்தி ஏப்ரல் 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு ஜூலை 24-ம் தேதி நடத்தப்படவிருக்கிறது. விண்ணப்பிக்கும் முறை, பாடத்திட்டம், தேர்வுமுறை உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.

நேரடியாக உதவி ஜெயிலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் துணை ஜெயிலர், சிறைத்துறை கூடுதல் சூப்பிரண்டு, சூப்பிரண்டு, டிஐஜி என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்.

Leave a Reply