சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலுக்கு காரணமான சட்ட அமைச்சரை பழிவாங்க நினைக்கிறார் ஹீரோ. தனது அரசியல் வளர்ச்சிக்கு பலமாக இருக்கும் தம்பியை, ஒரு கொலை செய்வதற்காக பரோலில் எடுக்கிறார் அமைச்சர். குறிப்பிட்ட நாளில் அவரை மீண்டும் சிறையில் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. ஆனால் திடீரென்று அந்த தம்பியை கடத்தி, அடைத்து வைக்கிறார் ஹீரோ. பிரச்சனை பெரிதாகிறது. பதவியை இழக்கிறார் அமைச்சர். பிறகு தம்பியை விடுவிக்கிறார் ஹீரோ. இதையடுத்து தம்பி, ஹீரோவையும் ஹீரோவின் காதலியையும் என்ன செய்தார் என்பது படம்.

துணிச்சல் கொண்ட இளைஞனாக விக்ரம் பிரபு. வில்லன் வம்சியை புத்திசாலித்தனமாகக் கடத்துவது, பிறகு அவரது அசுரத்தனமான தாக்குதலுக்கு ஈடுகொடுத்து பதிலடி கொடுப்பது என ஆக்ஷன் ஹீரோவுக்கான அஸ்திவாரத்தை பலமாகப் போட்டிருக்கிறார். காதல் காட்சிகளில் நாகரீகமும், நளினமும் பளிச்சிடுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் காதலியின் கையெழுத்தைப் போடுவதும், பஸ்சில் தான் கொடுத்த மீன் தொட்டியைப் பாதுகாக்கும் வகையில் காதலி கொடுக்கும் நீண்ட பில்லைக் கண்டு மலைப்பதும் சுவாரஸ்ய ஏரியா. சுரபி புதுமுகம் என்று நம்ப முடியவில்லை. அரியர்சை வைத்துக்கொண்டு, அம்மாவிடம் மாட்டி தவிப்பது, விக்ரம் பிரபுவிடம் ஐ லவ் யூ சொல்லச் சொல்லி அராஜகம் செய்வது, வம்சி கிருஷ்ணாவிடம் மாட்டிக்கொண்ட பிறகு கலங்குவது என நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார்.

கெட்ட அமைச்சராக வரும் ஹரிராஜன், ஓ.கே. ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறார், வம்சி கிருஷ்ணா. தன்னைக் கடத்தியவனின் பைக்கிலேயே பயணிக்கும் அவர், அடையாளம் கண்டதும் பாயும் காட்சி புல்லரிக்க வைக்கிறது. அமைச்சருக்கு பயப்படாமல், அவர் தம்பிக்கு வலைவிரிக்கும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம் கச்சிதம்.18 மாடி கட்டிடத்தை இப்படியும் காட்டி பயமுறுத்த முடியும் என்பதில் சக்தியின் கேமரா ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறது. இரும்பு பைப்புகள் முகத்தைப் பதம் பார்ப்பது போன்ற பிரமை.

சத்யாவின் ரீ&ரெக்கார்டிங் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. சுரபியின் பாங்க் அக்கவுன்ட் நம்பரை வைத்து, விக்ரம் பிரபுவைக் கண்டுபிடிக்கும் வில்லன்களின் டெக்னிக், டச். சட்ட அமைச்சரின் நடவடிக்கைகள் எல்லாம் பழசு. மெகா கட்டிடப் பணி நடக்கும் இடத்தில் ஒரே ஒரு வாட்ச்மேன் இருப்பதும், பிறகு அவர் கொல்லப்படுவதை யாரும் கண்டுகொள்ளாததும் நெருடல். வில்லன் கோஷ்டி போலீசாரை வரிசையாக போட்டுத் தள்ளிக்கொண்டே போவதும் யாரும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பதும் வழக்கம் போல இதிலும் நடக்கிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *