ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பிறகு நமக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்வது உத்தமம் என்று எண்ணி தேவையில்லாத பில்டப், ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் உதயநிதி. அதற்கே அவரை பாராட்டலாம். ஆனாலும் சுந்தரபாண்டியனில் கொடுத்த அழுத்தமான கதையை இதில் கொடுக்க தவறிவிட்டார் பிரபாகரன்.

கோவையில் இருந்து கணவரிடம் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்கு வரும் சாயாசிங்கை, அவரது கணவரோடு சமாதானப்படுத்தி சேர்த்து வைக்க, அக்காவுடன் கோவை செல்கிறார் தம்பி உதயநிதி. அங்கு தனது பழைய நண்பன் சந்தானத்தை பார்த்து பொழுதை கழித்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிர்வீட்டில் இருக்கும் நயன் தாராவை பார்க்கிறார். அதுவரை திருமணமே வேண்டாம் என்று ஆஞ்சநேயர் பக்தராக வாழ்ந்து கொண்டிருக்கும் உதயநிதி, நயன் தாராவிடம் ஒருதலையாக காதலிக்கிறார். காதலை நயனிடம் சொல்வதற்கு நண்பன் சந்தானத்திடம் ஆலோசனை கேட்கிறார்.

காதலை நயனிடம் சொல்லும்போது அவர் ஏற்கனவே தனது நண்பரை காதலித்து வருவதாக ஷாக் கொடுக்கிறார். ஆனால் நயன் தாரா காதலிக்கும் நபர் தவறானவன் என்பது தெரிய வர, நயன் தாராவை எப்படி தன் காதலை உதயநிதி புரிய வைக்கிறார் என்பதுதான் கதை.

எந்தவித லாஜிக்கையும் பார்க்காமல் காமெடியை மட்டும் மனதில் வைத்து படம் பண்ணியிருப்பதால் படம் முழுவதும் ஜாலியாக போகிறது. சந்தானம் கொடுக்கும் ஒவ்வொரு ஐடியாவையும் உதயநிதி செயல்படுத்தும்போது நிஜமாகவே தியேட்டர் அதிர்கிறது. உண்மையில் படத்தை தூக்கி நிறுத்துவது சந்தானம்தான்.

பஞ்ச் டயலாக் இல்லாமல், சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஹிரோயிசம் செய்யாமல் வெகு இயல்பாக நடித்திருக்கிறார் உதயநிதி. முதல் படத்தில் இருந்த கூச்சம் இதில் கொஞ்சம் விலகியுள்ளது. இதே மாதிரி கதையை தேர்ந்தெடுத்தால் கண்டிப்பாக தேறிவிடுவார்.

ஒரு பெரிய நடிகையை வீணடித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உதயநிதி தவிர வேறு யார் இந்த கேரக்டரில் நடிக்க அழைத்திருந்தாலும் நயன் தாரா நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பாரோ என்பது கேள்விக்குறிதான். ஆனாலும் நயன்தாராவை படத்தில் கவர்ச்சிகாக பயன்படுத்தாமல் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மயில்சாமி, சரண்யா, சாயாசிங் ஆகியோர்களும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்கள்.

ஹாரீஸ் ஜெயராஜுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசைக்கும் பெரிய வேலைகள் இல்லை.

முதல் படத்தில் இருந்த சீரியஸ் இதில் இல்லை என்றாலும் இரண்டரை மணிநேரம் போரடிக்காமல் படத்தை நகர்த்தி இருக்கிறார் பிரபாகரன்.

குடும்பத்துடன் ஜாலியாக ஒருமுறை பார்க்கலாம்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”http://bit.ly/1fnRH5u” standard=”http://www.youtube.com/v/EzPezhoRGmg?fs=1″ vars=”ytid=EzPezhoRGmg&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep9823″ /]

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *