shadow

 isisஇராக் மற்றும் சிரியா நாடுகளில் தீவிரவாத செயல்களை செய்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அந்நாட்டு மக்கள் தற்போது நேரடியாகவே தங்கள் எதிர்ப்பை காட்ட தொடங்கிவிட்டனர். நேற்று ஈராக்கில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பின் கொடியை கிராம மக்கள் ஒன்றுகூடி எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் 2 கிராமங்களைச் சேர்ந்த 170 ஆண்களை கடத்திச் சென்றதாக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

வடக்கு இராக், கிர்குக் மாகாணத்தில் உள்ள அல்-ஷஜாரா, காரீப் ஆகிய 2 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் கொடிகளை எரித்ததாகவும், அதனை தொடர்ந்து நேற்றிரவு திடீரென அந்த கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் 170 ஆண்களை  கடத்திச் சென்றதாகவும் உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்த அதிகாரி செய்தி நிறுவனங்களிடம் கூறும்போது, “30 வாகனங்களில் வந்த தீவிரவாதிகள் இவர்களை அருகில் உள்ள ஹவிஜா நகருக்கு கடத்திச் சென்றனர். அங்கு ஐ.எஸ். அமைப்பு சார்பில் நீதிமன்றமும் சிறையும் இயங்கி வருகிறது” என்றார்.

அல்-ஹஜாரா கிராமவாசி ஒருவர் கூறும்போது, “சிறை பிடிக்கப்பட்ட ஆண்களுக்கு தீங்கு ஏதும் செய்யவேண்டாம் என்று பெண்கள் மன்றாடினர். இதற்கு அனைவரிடமும் விசாரித்த பிறகு கொடியை எரித்தவர்களை மட்டுமே தண்டிப்போம் என்று தீவிரவாதிகள் கூறியதாகவும் தெரிவித்தார்.

காரீப் கிராமவாசி ஒருவர் கூறும் போது, “எங்கள் கிராமத்தில் கொடியை எரித்த 15 ஆண்களை தீவிரவாதிகள் தேடினர். பிறகு 90 பேரை பிடித்துச் சென்றுள்ளனர்” என்றார்.

இராக்கில் அதிக அளவில் பொதுமக்களை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கடத்திச் செல்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னர் கிர்குக் மாகாணத்தில் ஐ.எஸ். அமைப்பின் சாவடி மற்றும் கொடியை எரித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் 50 பேரையும், அதற்கு அடுத்த வாரத்தில் 20 பேரையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இவர்களில் பலர் பின்னர் விடுவிடுக்கப்பட்டனர். என்றாலும் ஐ.எஸ். அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இராக் மற்றும் சிரியாவில் பொதுமக்களில் ஆயிரக்கணக்கானோரை தீவிரவாதிகள் கொன்றுள்ளனர்

Leave a Reply