shadow

female-tobacco-usageபுகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்காது என நினைத்து பாலிசி எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தை  செலவு செய்யவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்.

ஆனால், புகைபிடிப்பவர்களுக்கும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தருகின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். புகைபிடிப்பவர் களுக்கான ஹெல்த் இன்ஷூரன்ஸ் குறித்து விளக்கமாக எடுத்து சொன்னார் ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் வேர்ல்டு புரோக்கிங் நிறுவனத்தின் இயக்குநர் மேத்யூஸ் பிரபாகரன்.

”புகைபிடிப்பவரின் வயது, ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறார், எவ்வளவு ஆண்டுகளாக இந்தப் பழக்கம் உள்ளது என்பதைப் பொறுத்துதான் பாலிசி எடுப்பவரின் ரிஸ்க் அளவிடப்படுகிறது. இதன் அடிப்படையில் கூடுதல் பிரீமியம் வசூலிக்கப்படும். ஆனால், ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுக்குமேல் பிடிப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தர மறுப்பதற்கான வாய்ப்புள்ளது.

புகைபிடிப்பவர்களுக்கான பிரீமியம் என்பது ஒவ்வொரு தனிநபருக்கும் வித்தியாசப்படும். ஏனெனில், தனிநபர் களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை யின் அடிப்படையில் பிரீமிய தொகை இருக்கும். அதாவது, புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் பிரீமியத்துடன்  இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசி தரும்.  

புகைபிடிப்பவர்கள் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, அதில் உண்மையான தகவல்களைக் குறிப்பிடுவது அவசியம். குறிப்பாக, ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள், எவ்வளவு நேர இடைவெளியில் பிடிப்பீர்கள், எத்தனை ஆண்டுகளாக இந்தப் பழக்கம் இருக்கிறது என்பது போன்ற கேள்விகளுக்கு சரியான பதில் தருவது அவசியம்.

இதில் தவறான விவரங்களைத் தந்தால், க்ளைம் பெறும்போது சிக்கல் வர வாய்ப்புள்ளது.  

உதாரணமாக, ஒருவர் பாலிசி எடுக்கும்போது 4 வருடங்களாகத்தான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், உண்மை யில் அவருக்கு அந்தப் பழக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேல் இருந்து, இந்த விவரம் சிகிச்சைக்குச் சேரும்போது, மருத்துவ அறிக்கையில் தெரியவந்தால் க்ளைம் கிடைக்காது.

இந்த நிலையில் இன்ஷூரன்ஸ் எடுத்தும் பயன் எதுவும் இல்லாமல் போய்விடும்” என்றார்.

ஒருவர் புகைபிடிப்பது என்பது அவரது தனிப்பட்ட பழக்கம் சார்ந்த விஷயம்தான். இதை மறைக்காமல் உள்ளபடி எடுத்துச் சொல்லி, இன்ஷூரன்ஸ் பாலிசியைப் பெறுவதே புத்திசாலித்தனம்!


க்ளைம் தருவதில் நிறுவனங்களிடையே வேறுபாடு!

பொதுத்துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை பொறுத்தவரையில், புகைபிடிப்பவர்களுக்கு என தனியாக கூடுதல் பிரீமியம் எதுவும் வசூலிப்பதில்லை. ஒருவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருக்கிறதா என்கிற தகவலை மட்டுமே கேட்டுக்கொள்கின்றன. ஆனால், தனியார் நிறுவனங்கள் புகைபிடிப்பவர்களுக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி வழங்கும்போது கூடுதல் பிரீமியம் வசூலிக்கின்றன. மேலும், புகைபிடிப்பதனால் சில வியாதிகள் வந்தாலும் அந்த வியாதிகளுக்கு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் தருகிறது. புகைபிடிப்பவர்களின் விஷயத்தில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடையே ஏன் இந்த வேறுபாடு?

Leave a Reply