shadow

ஏ.சி காற்று ஹெல்த்தியா?
ac
நகர்ப்புறங்களில் மட்டும் அல்ல… கிராமங்களிலும் ஏ.சியைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வீட்டில், அலுவலகத்தில், காரில் என 24 மணி நேரமும் ஏ.சியில் இருப்பவர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சிறிய கடைகள் முதல் பெரிய மால்கள் வரை எல்லா இடங்களிலும் ஏ.சி  அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. ஒரு மணி நேரம்கூட ஏ.சி இல்லாமல் இருக்க முடியாது என்கிற மனநிலை பலருக்கு வந்துவிட்டது. ‘ஏ.சி பயன்படுத்துவதால் இ.பி கட்டணம் அதிகரிப்பதைத் தவிர, வேறு என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது?’ என்பதுதான் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி.

ஏ.சியிலேயே இருப்பதும் பல உடல்நலக் குறைபாடுகளுக்குக் காரணம் ஆகிவிடுகிறது. மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ஏ.சியிலேயே இருப்பவர்களுக்கு, நுரையீரல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. குறிப்பாக, ஏ.சியை சுத்தம் செய்யாவிட்டால் பாதிப்பு பெருமளவில் இருக்கும். ஏ.சியில் உள்ள குளிர்விப்புச் சுருள் ஒடுக்கப்படுவதால், அதன் வடிகாலில் நுண்கிருமிகள் வளர ஆரம்பிக்கும். குறிப்பாக, ஆஸ்துமா, அலர்ஜி, சுவாச நோய்கள் இருப்பவர்கள் ஏ.சியில் இருக்கும்போது, அவர்களுக்கு நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல், போன்ற பிரச்னைகள் வர பல மடங்கு வாய்ப்பு அதிகம்.  ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் இருமல், தும்மல், போன்ற மேல் சுவாசக்குழாயில் கோளாறுகள் ஏற்படலாம். இதயநோய் ஏற்படவும் வாய்ப்பும் உள்ளது. ஏ.சியில் உள்ள நீரில் `எல் நீமொஃபிலா’ (l pneumophila) என்கிற கிருமி உள்ளது. இது தொற்றுநோயைப் பரப்பும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் குளிரான இடத்தில் இருக்கும்போது, நுரையீரல் சுருங்கிவிடும். இரவு முழுவதும் குளிர்நிலையை அதிகப்படுத்திவைத்துத் தூங்கும்போது, மூச்சுக்குழாய் சுருங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.  மூச்சுக்குழாய் மட்டும் அல்லாமல் மூக்கிலும் சைனஸ், அலர்ஜிக் சைனோடிஸ் போன்றவை தோன்றும். இந்த இயற்கைக்கு மாறான குளிர்காற்று மூக்கின் வழியே செல்வதால், மூக்கிலும்  மூச்சுக்குழாயிலும் சளி அதிக அளவில் உற்பத்தியாகும். ஏ.சியில் இருக்கக்கூடிய ஃபில்டர்களை சுத்தப்படுத்தாவிட்டால், அதில் அதிகப்படியாக  தூசி சேர்ந்துகொள்ளும். அவ்வாறு சுத்தப்படுத்தாதபோது, அதில் இருக்கக்கூடிய தூசுகள் வெளிவரும். அந்தக் காற்றை வெகு நேரம் சுவாசித்தால், நிச்சயம் நுரையீரல் பாதிக்கப்பட்டு, பிரச்னைகள் ஏற்படும்.  

விண்டோ, ஸ்பிளிட் ஏ.சியைவிட சென்ட்ரலைஸ்டு ஏ.சி-யை சற்று அதிகக் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இதைச் சரியாகப் பராமரிக்காமல்விட்டால், அதனுள் சேரும் தூசுக்களால் எல் நீமொஃபிலா உள்ளிட்ட கிருமிகள் உற்பத்தியாகி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தவிர சருமம் உலர்தல் உள்ளிட்ட  பிரச்னைகளும் ஏற்படலாம். குறிப்பாக நீண்ட நேரம் ஏ.சியில் இருக்கும்போது, தண்ணீர் அருந்தவேண்டிய உணர்வு வராது. இதனால், ஒருநாளைக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமையால் உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். ஏ.சி காற்று கண்களில் நேரடியாகப் படும்போது, கண் உலர்தல் பிரச்னை வரலாம்.

வெயில் படாமல் ஏ.சியிலேயே இருக்கும்போது,  வைட்டமின் டி உற்பத்தி பாதிக்கப்படும். இதனால், கால்சியம் சத்து கிரகிக்கப்படுவதில் பிரச்னை ஏற்பட்டு, எலும்பு அடர்த்தி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதற்காக ஏ.சி-யை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்பது இல்லை.

ஏ.சியில் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இருப்பது அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே, முடிந்தவரை தவிர்த்தால் போதும்.

மதியம், உச்சி வெயிலில் காரில் செல்லும்போது ஏ.சி போடலாம். காலை, மாலை வேளையில் நல்ல இதமான தட்பவெப்ப நிலையிலும் ஏ.சி பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே போதும்.

இயற்கைக் காற்றை அனுபவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டைச் சுற்றி பசுமையான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், அறையின் வெப்பநிலையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரோக்கியத்தையும் பெறலாம்!

Leave a Reply