shadow

periodsபீரியட்ஸ் டேட் ஆயிடுச்சே. இன்னும் ஏன் வரலை?’ இன்றைய பெரும்பாலான பெண்களின் கவலையே இதுதான். அதுவும் இளம்பெண்களுக்கோ பெரிய தலைவலி. மாதவிலக்குச் சுழற்சி சரியாக இல்லாமல்போனால் அந்தப் பெண்ணும் அவருடைய தாயாரும் அடையும் உடல் மற்றும் மனநலப் பிரச்னைகள் ஏராளம். அதிலும், இதை எப்படி வெளியே சொல்வது என்ற  தயக்கத்திலேயே பலரும் தங்கள் பிரச்னையை மகளிர் மருத்துவரிடம்கூட மனம்விட்டு பேச கூச்சப் படுகின்றனர். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து ரங்கத்தைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி அஷோக்குமார் சொல்லும் ஆலோசனைகள் இவை…

‘ஒரு பெண்ணின் விடலைப் பருவம் என்பது, 13 முதல் 16 வயதுக்கு இடைப்பட்ட காலம். இந்தச் சமயத்தில் அவள் உடலிலும் மனதிலும் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. மார்பகம் பெரிதாவது, உடல் எடையும் உயரமும் கூடுவது, மன அழுத்தம், பாலுணர்வு போன்றவற்றையும் அவள் உணர்கிறாள். இந்த மாற்றத்துக்கு,  உடலில் சுரக்கும்  ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரஜஸ்ட்ரான் ஹார்மோன்களே காரணம். பொதுவாக, பதின்பருவத்தொடக்கத்திலோ அல்லது இரண்டு மூன்று வருடங்களிலோ பெண் பூப்பெய்துகிறாள். 10 வயதுக்கு முன்னால் பூப்பெய்தினால், அதற்கு உடல் பருமன் மற்றும் உணவுப்பழக்கம்தான் முக்கியமான காரணங்கள். 16 வயதுக்கு மேலும் ஒரு பெண் பூப்பெய்தாமல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவேண்டும்.

பெண் பூப்பெய்திய பிறகு ஒவ்வொரு மாதமும் 28 நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மாதவிலக்கு வந்துவிட வேண்டும். இதுவே சரியான கால இடைவெளி; இயற்கையான மாதவிடாய் சுழற்சி. இன்றைய அவசர உலகத்தில், உணவுக் கட்டுப்பாடு இல்லாமை மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களால் மாதவிடாய் சீரின்மை அதிக அளவில் காணப்படுகிறது. சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை ஏற்பட பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆண்களைப்போல ரோமம் வளர்வது, திடீரென உடல் எடை அதிகரிப்பது, மாதவிலக்குத் தள்ளிப்போவது போன்றவை இதன் அறிகுறிகள். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இதைச் சரிப்படுத்தமுடியும்.

பி.சி.ஓ.எஸ் என்பது சினை முட்டைப் பையில் நீர்க் கட்டிகள் தோன்றி, சினைமுட்டை வளர்ச்சியைத் தடுக்கும். இதனால் முட்டை, வளர்ச்சிபெற்று வெளியேறுவது தாமதம் ஆகும். இந்தக் குறைபாட்டால் கரு உருவாவதிலும் தாமதம் ஏற்படும். ஹார்மோன் மாத்திரைகள், லாப்ராஸ்கோப்பி, சினைமுட்டை வளர்ச்சியை ஊக்குவிக்கும் மாத்திரைகள் போன்றவற்றால் இதைச் சரிசெய்ய முடியும். சீரற்ற மாதவிடாய் ஏற்பட, உணவுப்பழக்கம் மற்றும் உடல் உழைப்புக் குறைவும்் முக்கியமான காரணம். அந்தக் காலத்தில் பள்ளிக்கு நடந்தே செல்வார்கள். பள்ளி முடிந் ததும் மாலை முழுவதும் விளை யாடுவார்கள். போதுமான உடல் உழைப்பும் இருந்தது. இப்போது அது இல்லை. எனவே பள்ளி களில் கட்டாயமாக விளை யாட்டு நேரம் வைக்க வேண்டும். அதிகக் கொழுப்புச்சத்து உள்ள உணவைத் தவிர்த்து, இயற் கையான பழங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரும்புச்

சத்து அதிகமுள்ள கறிவேப்பிலை, முள்ளங்கி, முருங்கைக் கீரை முதலியவற்றை உண்ண வேண்டும். இவற்றைப் பின்பற்றினாலே ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்’ என்கிறார் டாக்டர் மகாலட்சுமி அஷோக் குமார்.

அம்மா என்னும் தோழி!

மகள் எதிர் நோக்கும் உடல்ரீதியான பிரச்னைகளுக்குத் துணையாக நிற்க வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமை. இந்தப் புரிதல் இல்லாமல்போனால்,  மனரீதியான பாதிப்புக்கு வழிவகுத்து மகளின் எதிர்கால வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். மகளின், ஒவ்வொரு பிரச்னையையும் மனம்விட்டுப் பேச வேண்டும். தாய், ஒரு தோழியைப்போல நடந்துகொள்ள வேண்டும்.  பூப்பெய்தும் பருவத்தில் உடலில் நிகழும் மாற்றங்களை எடுத்துக்கூறி அவளுக்குப் புரியவைக்க வேண்டும். மாதவிலக்கு நாட்களின்போது ஏற்படும் உதிரப் போக்கு, வயிற்று வலி, மன உளைச்சல், மனக் குழப்பம், தேவையற்ற பயம், கோபம் பற்றியும் எடுத்துக்கூறவேண்டும். எந்தக் காரணம் கொண்டும் பிறருடன் ஒப்பிடக் கூடாது. என் தாயே சிறந்தத் தோழி’ என்று மகளுக்கு உணரவைப்பதன் மூலம் தாய்க்கும் மகளுக்குமான நெருக்கம் அதிகரிப்பதுடன் மகளுக்கு எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் மேம்படும்.

நன்றி டாக்டர்விகடன்.

Leave a Reply