”இரண்டாம் உலகம்” எப்படி இருக்கிறது?

பூமியில் இருப்பது மாதிரியே வெவ்வேறு உலகங்கள் வேறு வேறு கிரகங்களில் இருக்கின்றன. இந்த பூமியில் வாழும் மனிதர்கள் சாயலிலேயே மனிதர்கள் அங்கும் வாழ்கின்றனர்… எனும் டைட்டில் கார்டு வாசகங்களுக்கிடையே “இரண்டாம் உலகம் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு இங்கு மண்ணுலகில் வாழும் ஆர்யா – அனுஷ்கா மாதிரியே இன்னொரு உலகமான இரண்டாம் உலகத்திலும் ஒரு ஆர்யா அனுஷ்கா வாழ்வதாக ஆரம்பமாகிறது திரைப்படம்!

அப்பொழுதே இங்கு ஆர்யாவும் அனுஷ்காவும் காதலர்களாக வாழ்வது மாதிரியே இன்னொரு உலகத்திலும் அவர்கள் இருவருமே காதலர்களாக வாழ. இங்கு இந்த பூலோகத்தில் மருத்துவம் படிக்கும் அனுஷ்காவிற்கு உடம்பு முடியாத அப்பாவுடனும், நல் உள்ளத்துடனும் போராடும் ஆர்யா மீது காதல். ஆனால் அனுஷ்கா மீது காதலை ஏற்படுத்த மறுக்கிறது ஆர்யாவின் குடும்ப சூழல். குடும்ப சூழலை மீறி ஒரு கட்டத்தில் ஆர்யாவுக்கு அனுஷ்கா மீது காதல் வரும் போது, அனுஷ்கா வேறு ஒருவருக்கு மனைவியாக நிச்சயிக்கப்படுகிறார். அதனால் அவர் பின் லோ லோ என அலையும் ஆர்யா, அவரது சம்மதம் பெறும் போது அனுஷ்கா எதிர்பாராமல் இறக்கிறார்.

அதே நேரம் இன்னொரு உலகம், இரண்டாம் உலகத்தில் தளபதியின் வீரம் இல்லா மகனாக இருக்கும் ஆர்யாவுக்கு அந்த ஊர் அநாதை அழகி அனுஷ்கா மீது காதல்! வீரம் நிறைந்த அனுஷ்காவிற்கு அந்த உலகத்து போர் படையில் வீராங்கனையாக செயல்பட ஆசை. பெண்களை படையில் சேர்த்துக்கொள்ள விரும்பாத அந்த உலகம் அனுஷ்காவை புறக்கணிக்கிறது. ராஜா அனுஷ்காவை அந்தப்புரத்திற்கு அழைத்து போக சொல்கிறார். ஆர்யா, அனுஷ்கா தனது ஆள் என்கிறார். ராஜாவை எதிர்த்து பேசிய ஆர்யா தளபதியில் மகன் என்பதால் சலுகை காட்டப்படுகிறது. எப்படி? ராஜாவிற்கு பெருமை சேர்க்கும் சிங்கத்தை வேட்டையாடி, சிங்கத்தோலை கொண்டு வந்தால் ஆர்யாவுக்கு அனுஷ்காவை விட்டுத்தருவதாக மூன்று நாள் கெடு விதிக்கிறார் அரசர். கோழை ஆர்யா, அனுஷ்காவிற்காக வீரம் பொருந்தியவராகி மினி டைனோசர் சைசில் கிராபிக்சில் வித்தியாசமாகத் தெரியும் ஒரு ஜந்துவை வேட்டையாடி அதன் தோலை ராஜாவிடம் கொடுத்து அனுஷ்காவிற்கு மாலையிடுகிறார். இதனால் தனது வீராங்கனை லட்சியம் வீணாகி ஆர்யாவின் மனைவி ஆன வருத்தத்தில் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போகிறார் அனுஷ்!.

இன்டர்வெல்லுக்கு முன் இரண்டு அனுஷ்காக்களும் இறந்து போகின்றனர். அதன்பின் பூலோகத்து ஆர்யா, இரண்டாம் உலக அம்மா கடவுளின் கிருபையால் அந்த உலகத்துக்கு போகிறார். அங்கு அம்மா கடவுளை திருடிப்போகும் கயவர்களிடமிருந்து இரண்டு ஆர்யாக்களும் அம்மா கடவுளை மீட்கப்போராடுகின்றனர். என்ன அதிசயம்? உயிரோடு இருக்கும் அந்த உலகத்து அனுஷ்காவும் இவர்களோடு சேர்ந்து அம்மா கடவுளை மீட்டு இரண்டாம் உலகத்துக்கு நல்லது செய்கிறார்.

இந்த இரண்டு உலகத்து காதல் கதையும் நீரில் மூழ்கியபடி பூலோகத்து ஆர்யா பிளாஷ் பேக் கதையாக சொல்ல ஆரம்பிக்கும் போது தொடங்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் அவர் சொல்லி முடித்ததும் நான் நினைத்த 2 கதைகளையும் சொல்லி முடித்த திருப்தியோடு கண்ணை மூடுகிறேன் எனும் போது  அதே நேரம் என்னையும் கண்ணை மூட விடாமல் கரை சேர்க்கும் கடவுள் இதோ ஏதோ ஒரு புது உலகத்துக்கு அனுப்புகிறார் என்று மூன்றாவது உலகத்தில் கரை ஒதுங்குகிறார் ஆர்யா. அங்கு தென்படும் குடில்களில் ஒரு குடிலின் கதவை தட்டும் ஆர்யாவுக்கு அதிர்ச்சி! காரணம், அங்கு கதவை திறக்கும் மூன்றாவது அனுஷ்கா தான்..

இரண்டு உலகத்து ஆர்யாக்களும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். அதிலும் காதல், காதல் என்று திரியும் பூலோகத்து ஆர்யாவை விட இரண்டாம் உலகத்து கட்டுமஸ்து ஆர்யா கச்சிதம்!

மூன்றாம் உலகத்து அனுஷ்கா சில நிமிடங்ளே வந்தாலும் சிறப்பு! இரண்டாம் உலகத்து அனுஷ்காவின் வாள் வீச்சும் பூலோகத்து காதல் கண் பேச்சும் கூட சூப்பர்ப்! பூலோக அனுஷ்காவின் தோழிகள், பேராசிரியை, இரண்டாம் உலகத்து அம்மா கடவுள், ராஜா, தளபதி, பாலே நடனக்காரர்கள் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்தமும் கூட கச்சிதம்!

ராம்ஜியின் ஒளிப்பதில் பூலோகத்தை காட்டும் ஆரம்ப காட்சிகளில் வரும் மழைத்தூறல், இரண்டாம் உலகத்திற்கான லைட்டிங், கலர் புல், கலக்கல் விஷயங்கள்.. பூக்கள் மலரும் புது உலக கிராபிக்ஸ் டெக்னிக்கல் எல்லாம் படத்தின் பெரிய பிளஸ்! ஆனால் கதை, திரைக்கதை விஷயத்தில் உள்ள பூச்சுற்றல் பெரிய மைனஸ்!.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அதிரும் அனிருத்தும் கூட இரண்டாம் உலகத்திற்கு பெரிய பரிமாணத்தை தருகின்றன.

“அம்மா கடவுள், இரட்டை இலை முளை விடுவது என ஏதோ ஹைடெக் அதிமுக கொள்கை பரப்பு படம் மாதிரி இரண்டாம் உலகத்தை படைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கு என்னவாயிற்று? தெரியவில்லை!

கிளைமாக்ஸ் போர்முனை முத்தக்காட்சிகள், புதிதாக பூக்கள் மலரும் இரண்டாம் உலக காட்சிகள் என இதுவரை தமிழ் சினிமா கண்டிராத, ரசிக்கும் விஷயங்கள் நிறைய இருந்தாலும் இந்த படத்தை இன்னொரு உலகத்தின் ரசிகர்களும் பார்த்தார்கள் என்றால், இரண்டாம் உலகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறலாம்!

Leave a Reply