13நாளை மார்ச் 8ஆம் தேதி உலகமகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  உலக மகளிர் தினத்தையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா

”பெண்கள் நல்வாழ்வுக்கு அ.தி.மு.க. அரசு எடுத்த சீரிய முயற்சியினால் தமிழகத்தில் பெண் கல்வி 76 விழுக்காடாக உயர்ந்துள்ளதும், பெண் குழந்தை பாலின விகிதம் 946ஆக உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மகளிரும் இந்தத் திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது வாழ்வினை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது பேரவா.

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர் கொள்ளும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, புதிய சரித்திரம் படைத்திட உறுதியேற்போம் எனக்கூறி, இந்த இனிய நாளில் அனைத்து மகளிருக்கும் எனது உளமர்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”

தி.மு.க. தலைவர் கருணாநிதி

”அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டு மணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச் திங்கள் 8ஆம் நாள். பின்னர் அந்நாளே, ‘உலக மகளிர் தினம்’ என ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.

நடுநிலைமையுடன், சிந்திப்போர் அனைவரும், உணர்ந்து மகிழ்ந்து போற்றும் வகையில், கடந்த கால தி.மு.க. அரசு மகளிர் சமுதாய மேன்மைக்கு மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியதன் விளைவாகத்தான் இன்று எங்கும் – எல்லா அலுவலகங்களிலும், எல்லாத் துறைகளிலும், எல்லாக் கலைகளிலும் பெண்கள் பங்குபெற்றுப் பயனடைந்து முன்னேற்றம் கண்டு சாதனைகள் பல படைத்துப் பெருமைகளைக் குவித்து வருகிறார்கள் என்பதனை ஊரும், உலகமும் கண்டு உவந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி; மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தமிழக மகளிர் சமுதாயம் முழுமைக்கும் தெரிவித்து மகிழ்கிறேன்”

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ

”பெற்ற தாயை உற்ற தெய்வமாக போற்றி வணங்கும் பண்பாடு பன்னெடுங்காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீக்கி, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் உரிமையும் பாதுகாப்பும் உள்ளவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற கிளர்ச்சிகளைப் பெண்களே முன்நின்று நடத்தினர்; உரிமைகளும் பெற்றனர்.

அண்மைக் காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி பெரும் துன்பத்திலும், அவலத்திலும், கண்ணீரிலும் தவிப்பதுதான் இன்றைய நிலை ஆகும். கண்ணியத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் பெண்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலமையை ஏற்படுத்த உலக மகளிர் நாளில் உறுதி ஏற்போம்”

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

”மகளிரின் முக்கியத்துவத்தையும், மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையிலான சர்வதேச மகளிர் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மகளிர் சமுதாயத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகளிருக்கு உண்மையான சுதந்திரமும், நிம்மதியும் கிடைக்க வேண்டுமானால் அதற்கான முதல்படியாக தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மது ஒழிக்கப்படவேண்டும். அந்த இலக்கை நோக்கி அனைத்து வடிவங்களில் போராட இந்த நாளில் மகளிர் மட்டுமின்றி அனைவரும் உறுதியேற்க வேண்டும்.”

 

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

”உலகெங்கிலும் சமத்துக்காகவும், உரிமைகளுக்காகவும், கண்ணியமான வாழ்க்கைக்காகவும் போராடும் பெண்களுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சர்வ தேசப் பெண்கள் தின வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

அனைத்து வித பாகுபாடுகளையும் எதிர்த்துப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, குடும்ப ஜனநாயகம் மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்காகக் குரல் கொடுக்கிறது. பெண்களுக்கெதிரான குற்றங்களை எதிர்த்து, நீதிக்காகக் களத்தில் நிற்கிறது. அரசியல், சமூக, உழைக்கும் வர்க்கக் கோரிக்கைகளுடன் தொடங்கிய சர்வ தேச பெண்கள் தினத்தின் போராட்ட பாரம்பரியம் முன்னெடுத்துச் செல்லப்பட, கட்சி தொடர்ச்சியாகப் பங்களிப்பு செய்யும். அனைத்து தளங்களிலும் சம உரிமைகள் கோரி நடத்தப்படும் பெண்களின் ஜனநாயகப் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும்”

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்

”தற்போது பெண்சிசுக் கொலை என்ற நிலையில் இருந்து மாறி, பெண் குழந்தைகள் பிறப்பதையே தடுக்கும் போக்கால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. பெண்ணுக்கு திருமணம் என்றாலே வரதட்சணை என்ற பெயரில் வியாபாரம் ஆக்கப்படுகிறது. பெண்கள் உயர்கல்வி பயில வேண்டுமென்றால் குறைந்தகட்டணத்தில் கல்வி கற்கும் நிலை தமிழ்நாட்டில் இல்லை.

இதையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்திற்கு இடையே கல்வி கற்றாலும், அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லை. அப்படியே வேலைவாய்ப்பு இருந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலைகளால் பல்வேறு கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இதைப்போக்கிட அரசு பெண்களின் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும். பெண்கள் தற்சார்பு பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெறவும், தேமுதிக சார்பில் எனது மகளிர் தின நல்வாழ்த்துக்களை இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்”

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *