பெங்களூரு: இந்திய கிரிக்கெட்டின் புதிய “ஹீரோ’வாக உருவெடுத்திருக்கிறார் ரோகித் சர்மா. ஏழாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இவர், அதிக சிக்சர் உட்பட பல சாதனைகளை படைத்து அசத்தினார்.

ஏழாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில்  நடந்தது. முதலில் “பேட்’ செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா இரட்டை சதம் (209) அடித்து கைகொடுக்க, 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 383 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு ஜேம்ஸ் பால்க்னர் (116), மேக்ஸ்வெல் (60) எடுத்து ஆறுதல் தந்தனர். ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம், தொடரை இந்திய அணி 3-2 எனக் கைப்பற்றி, கோப்பை வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்தியாவின் ரோகித் சர்மா பெற்றார்.

ரோகித் சர்மா கூறியது: ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு, ஐ.சி.சி.,யின் புதிய “பீல்டிங்’ விதிமுறைகள் கைகொடுத்தன. இதன்படி, கடைசி 10 ஓவரில் ஐந்து பீல்டர்கள், “30 யார்டு’ வட்டத்துக்குள் நிறுத்த வேண்டும் என்பதால், அதிரடியாகவும், சுலபமாகவும் ரன் சேர்க்க முடிந்தது.

பொதுவாக போட்டியில், அதிரடி ஆட்டத்துக்கு மாற சிறிது நேரம் எடுத்துக் கொள்வேன். இதுதான் எனது பேட்டிங் ஸ்டைல். சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியிலும் இந்த முறையை கையாண்டேன். நேற்றைய போட்டியிலும் துவக்கத்தில் நிதானமாக ஆடி, பின் அதிவேகமாக ரன் எடுத்தேன்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் “மிடில்-ஆர்டரில்’ களமிறங்க தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் போட்டியில் துவக்க வீரராக களமிறக்கப்பட்டேன். இப்பணியை சிறப்பாக செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் எந்த வரிசையில் களமிறங்குவேன் எனத் தெரியாது.

டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு, இலக்கு, எல்லாம். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். டெஸ்ட் போட்டியிலும் சாதிக்கும் பட்சத்தில், என்னை விட மகிழ்ச்சியான வீரர் யாரும் இருக்க முடியாது என்று தான் கூறுவேன்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Leave a Reply