தென் ஆப்ரிக்க அணியுடனான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் செதேஷ்வர் புஜாரா, விராத் கோஹ்லியின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோகன்னஸ்பர்க், நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று  முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. விராத் கோஹ்லி 119 ரன் விளாசினார். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன் எடுத்திருந்த இந்தியா, மேற்கொண்டு 16 ரன் மட்டுமே சேர்த்து கடைசி 5 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் எடுத்திருந்தது. டுபிளெஸ்சிஸ் 17 ரன், பிலேண்டர் 48 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டுபிளெஸ்சிஸ் 20 ரன், பிலேண்டர் 59 ரன் எடுத்து ஜாகீர் வேகத்தில் ஆட்டமிழந்தனர். ஸ்டெயின் 10 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ரோகித் வசம் பிடிபட்டார். மார்க்கெல் 7 ரன் எடுத்து ஜாகீர் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது (75.3 ஓவர்). இந்திய பந்துவீச்சில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா தலா 4, முகமது ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.இதையடுத்து 36 ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக தவான், விஜய் களமிறங்கினர். தவான் 15 ரன் மட்டுமே எடுத்து பிலேண்டர் வேகத்தில் காலிஸ் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து விஜய் – புஜாரா ஜோடி நிதானமாக விளையாடி 2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்தது. விஜய் 39 ரன் எடுத்து காலிஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்ஸ் வசம் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து புஜாராவுடன் விராத் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடிய இருவரும் தென் ஆப்ரிக்க பந்துவீச்சை சிதறடித்தனர்.

இவர்களைப் பிரிக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறினர். கோஹ்லி அரை சதம் அடிக்க, புஜாரா சதம் விளாசி அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்துள்ளது. புஜாரா 135 ரன் (221 பந்து, 18 பவுண்டரி), கோஹ்லி 77 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, இந்திய அணி 320 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் வெற்றி அல்லது டிரா செய்ய பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *