ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட்போட்டி இந்தியாஅபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 360 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக ‘சேசிங்’ செய்து புதிய சாதனை படைத்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 2–வது ஒரு நாள் போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்சும், பிலிப் ஹியூக்சும் நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். இந்திய வேகப்பந்து வீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடிய பிஞ்ச் சிக்சர் அடித்து இந்த தொடரில் 3–வது முறையாக (20 ஓவர் போட்டியையும் சேர்த்து) அரைசதத்தை எட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்டு அவர் (50 ரன், 53 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்–அவுட் ஆனார். தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் (15.2 ஓவர்) திரட்டியது.
அடுத்து வந்த ஷேன் வாட்சனும், தனக்கு மிகவும் பழக்கமான ஜெய்ப்பூரில் வேடிக்கை காட்டினார். அஸ்வின், ஜடேஜா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட அவர் தனது பங்குக்கு 59 ரன்கள் (53 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) சேர்த்து பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து கேப்டன் ஜார்ஜ் பெய்லி களம் புகுந்தார். இதற்கிடையே அரைசதத்தை கடந்த ஹியூக்ஸ் 83 ரன்களில் (103 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விக்கெட்டை பறிகொடுத்தார்.
4வது விக்கெட்டுக்கு ஜார்ஜ் பெய்லியும், கிளைன் மேக்ஸ்வெல்லும் கூட்டணி அமைத்த போது தான், அவர்களின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினார்கள். பவுண்டரியும், சிக்சரும் நாலாபக்கமும் சர்வ சாதாரணமாக ஓடியது. இறுதியில் இவர்களும் அரைசதம் அடித்து அமர்க்களப்படுத்தினர்.
ஸ்கோர் 308 ரன்களாக உயர்ந்த போது, மேக்ஸ்வெல் 53 ரன்களில் (32 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன் அவுட் ஆனார். கேப்டன் ஜார்ஜ் பெய்லின் ‘வேட்டை’ கடைசி வரை நீடித்ததால் அந்த அணி 350 ரன்களை சுலபமாக தாண்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் ஆஸ்திரேலியா 122 ரன்களை சேகரித்தது கவனிக்கத்தக்கது. பெய்லி 92 ரன்களுடன் (50 பந்து, 8 பவுண்டரி, 5 சிக்சர்) களத்தில் இருந்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் புவனேஸ்வர்குமார் தவிர மற்ற அனைவரும் வள்ளல்களாக மாறினர். குறிப்பாக இஷாந்த் ஷர்மாவுக்கு இந்த ஆட்டமும் விக்கெட் இல்லாத கசப்பான நாளாக அமைந்தது. 10 ஓவர்களில் 72 ரன்களை விட்டுக்கொடுத்த ஜடேஜாவுக்கு ஒரு நாள் போட்டியில் மோசமான பந்து வீச்சு இது தான். ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தங்களது அதிகபட்ச ஸ்கோரை ஆஸ்திரேலியா சமன் செய்துள்ளது. ஏற்கனவே 2003 உலக கோப்பையிலும் (359), 2004ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்திலும் (359) இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா இதே ஸ்கோரை எடுத்திருந்தது. அதே சமயம் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ரன் இது தான். இதற்கு முன்பு 2009–ம் ஆண்டு ஐதராபாத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட்டுக்கு 350 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் நிதானமாக பேட்டை சுழட்டினர். தவான் 18 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹேடின் தவற விட்டார். இதற்குரிய விளைவு இவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று ஆஸ்திரேலியர்கள் நினைத்து கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
மறுவாழ்வு பெற்ற தவான், வாட்சனின் ஒரே ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இருவரும் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டிற்கு விரட்டினர். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக திகழ்ந்ததால் ஆஸ்திரேலிய பவுலர்களால் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. தவான் 95 ரன்களில் (86 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். அவர் தான் இந்தியாவின் நெருக்கடியை குறைத்ததுடன், அணியின் ரன்ரேட்டையும் கணிசமாக உயர்த்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டார்.
ருத்ரதாண்டவமாடிய விராட் கோலி, சிக்சர், பவுண்டரி என்று அடித்து நொறுக்கி ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டியதுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அறுஞ்சுவை விருந்தே படைத்து விட்டார். மறுமுனையில் ரோகித் ஷர்மாவும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்ய தவறவில்லை. இவர்களின் ஆக்ரோஷமான தாக்குதலை எப்படி அடக்குவது என்பது தெரியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் நொந்து நூலாகி போய் விட்டனர்.
அபாரமாக ஆடிய ரோகித் ஷர்மா தனது 3வது சதத்தையும், கோலி தனது 16வது சதத்தையும் பூர்த்தி செய்தனர். மேக்ஸ்வெல் வீசிய 44வது ஓவரில் பவுண்டரி, சிக்சர், பவுண்டரி என்று தொடர்ச்சியாக அடித்து ரோகித் ஷர்மா ஆட்டத்தை தித்திப்புடன் முடித்து வைத்தார். இந்திய அணி 43.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 362 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ரோகித் ஷர்மா 141 ரன்களுடனும் (123 பந்து, 17 பவுண்டரி, 4 சிக்சர்), விராட் கோலி 100 ரன்களுடனும் (52 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ரன் மட்டுமின்றி, அதிகபட்ச சேசிங்கும் இது தான். 2010ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில நடந்த ஆட்டத்தில் 292 ரன்களை துரத்திபிடித்ததே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் முந்தைய சிறந்த சேசிங்காக இருந்தது.
ரோகித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒரு நாள் தொடரை இந்தியா 11 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. 3வது ஒரு நாள் போட்டி வருகிற 19ந்தேதி மொகாலியில் நடக்கிறது.

Leave a Reply