இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 234 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன் எடுத்திருந்தது.

தவான் 21, விஜய் 16 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். தவான் 23 ரன் எடுத்து ஷில்லிங்போர்டு சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து விஜய் 26 ரன் எடுத்த நிலையில் ஷில்லிங்போர்டு பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ரசிகர்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே சச்சின் களமிறங்கினார். புஜாரா , சச்சின் நிதானமாக விளையாடி 22 ரன் சேர்த்தனர்.

புஜாரா 17 ரன் எடுத்து  விக்கெட் கீப்பர் ராம்தின் வசம் பிடிபட்டார். இந்தியா 79 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. மேற்கொண்டு 3 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் சச்சின் 10, கோஹ்லி 3 ரன்னில் ஷில்லிங்போர்டு சுழலில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 83 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.

இந்த நிலையில் அறிமுக வீரர் ரோகித் ஷர்மா , கேப்டன் டோனி இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தனர். 20 ஓவர்கள் தாக்குப் பிடித்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 73 ரன் சேர்த்தது. டோனி 42 ரன் எடுத்து (63 பந்து, 5 பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்திய அணியை 200 ரன்னுக்குள் சுருட்டிவிடலாம் என்ற முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

ஆனால், ரோகித் , அஷ்வின் ஜோடி பொறுப்புடன் பொறுமையாக விளையாடி அதை முறியடித்தது. இவர்களைப் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்திய ரோகித், தனது முதல் டெஸ்ட் இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபித்தார்.

சாதனை நாயகன் சச்சினின் ஆசீர்வாதத்துடன் இந்திய அணி தொப்பியை பெற்றுக்கொண்ட ரோகித், அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

இந்த சாதனையை நிகழ்த்தும் 14வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. மறுமுனையில் அஷ்வின் அரை சதம் விளாச இந்திய அணி வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 354 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ரோகித் 127 ரன் (228 பந்து, 16 பவுண்டரி, 1 சிக்சர்), அஷ்வின் 92 ரன்னுடன் (148 பந்து, 10 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கைவசம் 4 விக்கெட் இருக்க, இந்திய அணி 120 ரன் முன்னிலையுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்குகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *