shadow

reviewநான், சலீம் என இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் முந்தைய இரண்டு படங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமாக முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி.

பக்கத்து பக்கத்து அறைகளில் வழக்கறிஞர்களாக இருக்கும் விஜய் ஆண்டனியும், நாயகி சுஷ்மா ராஜும், கேஸுக்காக அலைகின்றனர். யார் முதலில் கேஸ் பிடிப்பது என்பதில் ஆரம்பித்த போட்டி, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுகிறது. இந்நிலையில் எம்.எஸ்.பாஸ்கருக்கும் பசுபதிக்கும் இடையே ஒரு நிலத்தகராறு கேஸ் வருகிறது. இந்த கேஸில் பசுபதிக்காக விஜய் ஆண்டனியும், எம்.எஸ்.பாஸ்கருக்காக சுஷ்மாராஜும் வாதாட ஆரம்பிக்க, படத்தின் காமெடி எக்ஸ்பிரஸ் இங்கிருந்துதான் கிளம்புகிறது.

இந்நிலையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சுஷ்மா ராஜிடம் தற்செயலாக சிக்கியுள்ள டிவிடி ஒன்றை கைப்பற்ற முயற்சி செய்கிறார். இதற்காக அவரையே என்கவுண்டர் செய்யவும் அவர் முடிவு செய்கிறார். அவரிடம் இருந்து சுஷ்மா ராஜ் தப்பித்தாரா? விஜய் ஆண்டனி காதல் என்ன ஆயிற்று? என்பதுதான் கதை.

ஒரே ஒரு வரி கதையை சம்பவங்களாலும், நகைச்சுவை காட்சிகளாலும் நகர்த்தி செல்கிறார் இயக்குனர் ஆனந்த். படம் முழுக்க காமெடி காட்சிகள்தான். குறிப்பாக இரண்டாவது பாதியில் வரும் மால் காட்சிகள், கோர்ட் காட்சிகள், மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் சிரித்து சிரித்து பலருக்கு வயிறு வலி வந்திருக்கும். காதலுக்கு நேரமில்லை படத்திற்கு பின்னர் வரும் முழுநீள காமெடி படம் என்றால் அது இந்தப்படம்தான் என்பதை அழுத்தமாக கூறலாம்.

விஜய் ஆண்டனிதான் ஹீரோ. ஆனால் இவருக்கு காமெடி சுத்தமாக வரவில்லை என்பதுதான் பரிதாபம். இந்த படத்தை இவர் தயாரிப்பதோடு நிறுத்திவிட்டு வேறொருவரை நடிக்க வைத்திருந்தால் படம் சூப்பர் ஹிட்.

ஹீரோயின் சுஷ்மா ராஜ், கோலிவுட்டின் புதுவரவு. ஆனால் பல படங்களில் நடித்த அனுபவம் தெரிகிறது அவரது நடிப்பில். சரியான கதையை தேர்வு செய்து நடித்தால் கண்டிப்பாக கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார்/.

எம்.எஸ்.பாஸ்கரும், பசுபதியும்தான் படத்தை முழுதாக தூக்கி நிறுத்துகின்றனர். இவர்கள் தோன்றும் காட்சிகள் அனைத்திலுமே தியேட்டர் அதிர்கிறது. கிராமத்து பெரியவர்களாக வரும் இருவரும் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குறிப்பாக சென்னை மால்களில் இருவரும் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. கடைசி வரை படத்தை கொஞ்சம்கூட போரடிக்காமல் கொண்டு செல்வது இவர்கள் இருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் மொக்கை ஜோக் அடிக்காமல் உண்மையாக சிரிக்க வைத்துள்ளார் ஜெகன். இசையமைப்பாளர் தீனாதேவராஜனின் பாடல்கள் வரும்போது கேண்டீனில் நல்ல கூட்டம் கூடுகிறது. ஒரு பாடல் கூட தேறவில்லை என்பது பரிதாபம். இருப்பினும் பின்னணி இசையை நன்றாக போட்டுள்ளார்.

படத்தின் இயக்குனர் என்.ஆனந்துக்கு முதலில் ஒரு சபாஷ். விஜய் ஆண்டனி போன்ற உம்மணாமூஞ்சியை வைத்துக்கொண்டு ஒரு மிகப்பெரிய காமெடி படத்தை கொடுத்ததே பெரிய விஷயம்தான்.

மொத்தத்தில் ‘இந்தியா-பாகிஸ்தான். ஒரு காமெடி எக்ஸ்பிரஸ்

Leave a Reply