இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. “டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ஆந்திராவை “ஹெலன்’ புயல் தாக்கியதால், ஆடுகளம் இரண்டு நாட்கள் மூடப்பட்டு இருந்தது. இதனால் முதலில் “பேட்’ செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கேற்ப இந்திய அணி துவக்கத்தில் திணறியது.

யுவராஜ் (28), ரெய்னா (23) நிலைக்கவில்லை. தொடர்ந்து அசத்திய கோஹ்லி ஒரு ரன்னில் சதத்தை பரிதாபமாக நழுவவிட்டார். இவர், 99 ரன்கள் எடுத்திருந்த போது, ராம்பால் வீசிய “பவுன்சரை’ தூக்கி அடித்தார். இதனை மிகவும் தாழ்வாக ஜேசன் ஹோல்டர் பிடிக்க, கோஹ்லி (99 ரன், 100 பந்து, 9 பவுண்டரி) விரக்தியுடன் வெளியேறினார்.

ரவிந்திர ஜடேஜா (10) ஏமாற்றினார். பின் “கூலாக’ விளையாடிய கேப்டன் தோனி, தனது வழக்கமான “பினிஷிங்’ பணியை கச்சிதமாக செய்தார். ஹோல்டர், டுவைன் பிராவோ பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். பின் ராம்பால் வீசிய 49வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு இமாலய சிக்சர் அடித்து, ஒருநாள் போட்டியில் தனது 50வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவருக்கு அஷ்வின் (19), நன்கு ஒத்துழைப்பு தந்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. கேப்டன் தோனி (51 ரன், 4 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரவி ராம்பால் 4 விக்கெட் வீழ்த்தினார்.

சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (12), சாமுவேல்ஸ் (8) ஏமாற்றினர். பின் இணைந்த பாவெல், டுவைன் பிராவோ ஜோடி, விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. மோகித் வீசிய 10வது ஓவரில் “ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்த டேரன் பிராவோ, ஒருநாள் போட்டியில் தனது 14வது அரைசதம் அடித்தார். அஷ்வின் “சுழலில்’ டேரன் பிராவோ (50) வெளியேறினார்.

பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் பாவெல், தனது 4வது அரைசதத்தை(59) பதிவு செய்தார். கேப்டன் டுவைன் பிராவோ (18) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பின் இணைந்த சிம்மன்ஸ், டேரன் சமி, இந்திய பந்துவீச்சை ஒருகை பார்த்தது. ஜடேஜாவின் 43வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்த சிம்மன்ஸ், ஒருநாள் அரங்கில் தனது 13வது அரைசதம் அடித்தார். இவர், 62 ரன்கள் எடுத்த போது ஜடேஜாவிடம் சிக்கினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய டேரன் சமி, புவனேஷ்வர், மோகித், ஷமி ஆகியோரது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.

ஷமி வீசிய போட்டியின் 49வது ஓவரில் ஹோல்டர் (7) சுனில் நரைன் (0) வெளியேறினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டன. முதல் மூன்று பந்தில் 3 ரன்கள் கிடைக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சமி (63) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர், ஷமி, அஷ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் டேரன் சமி வென்றார்.

Leave a Reply