இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்விடைந்தது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது:

புனே ஆடுகளம் 300 ரன்களுக்கும் மேல் எடுக்கும் அளவுக்கு இல்லை. நாங்கள் தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அதிக ரன்கள் எடுக்க விட்டுவிட்டோம். இடையில், எங்களது சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட்டு மீண்டு வர முயற்சித்தனர். ஜடேஜா, யுவராஜ் சிங் நன்கு பவுலிங் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி இணைந்து நல்ல “பார்ட்னர்ஷிப்’ அமைத்தனர். ஆனால், “மிடில் ஆர்டரில்’ வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் தந்தனர்.

மற்றபடி, தோல்விக்கு யாரையும் குறிப்பாக, குற்றம் சொல்ல விரும்பவில்லை. பவுலிங், பேட்டிங் என, எதுவுமே சரியாக அமையவில்லை. பேட்ஸ்மேன்கள் சரியான திட்டமிடல் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் அடித்து விளையாடினர்.

அதேநேரம், “ஷார்ட் பிட்ச்’ பந்துகளில் பலவீனம் எல்லாம் கிடையாது. சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இவ்வகை பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டோம். அடுத்து வரும் போட்டிகளில் இதுபோன்ற தவறு நடக்காத வகையில் பார்த்துக் கொள்வோம்.

வழக்கமாக நான்காவது இடத்தில் யுவராஜ் சிங் தான் களமிறங்குவார். இந்த இடத்துக்கு இவரைத் தவிர பொருத்தமானவர் யாரும் கிடையாது. எதிர்வரும் உலக கோப்பை 2015 தொடரை முன்னிட்டு, ரெய்னாவுக்கு பயிற்சி தரும் வகையில் தான் இவரை முன்னதாக அனுப்பினோம். இவ்வாறு தோனி கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *