shadow

sambandhan and swarajஇலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் எம்.பிக்கள் குழு மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தனர். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங், ஆகியோரை சந்தித்து பேசிய இந்த குழுவினர் அதன்பின்னர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே.தோவாலையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தனித்தனியாக சந்தித்தனர்.

பின்னர் டெல்லியில் நேற்று இரா.சம்பந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் நிலைமையை வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களிடம் விரிவாக விளக்கி கூறியுள்ளோம். இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்க ஆர்வம் காட்டாமல் இருக்கின்றார். மேலும் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சுதந்திரமாக எவ்வித முடிவையும் எடுக்க முடியாமல் இக்கட்டான நிலைமையில் உள்ளார்.

இலங்கை அரசமைப்பு சட்டம் 13 (ஏ) பிரிவு திருத்தத்தால் மட்டும் தமிழர்களுக்கு தீர்வு ஏற்பட்டுவிடாது. இலங்கை தமிழர்களின் மொழி, இன, கலாசார அடையாளங்களை அழிக்கும் ராஜபக்சே அரசின் நடவடிக்கையை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.  இந்தியாவில் தான் இலங்கைத் தமிழர்களின் ஆணிவேர் உள்ளது. அவர்களுடைய கலாசாரம், இனம் ஆகியவற்றுக்கு இந்தியா தான் பிறப்பிடம். எனவே பாதிக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகளைக் காக்கவும், அவர்கள் பாதுகாப்புடனும், மரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் இந்தியா இலங்கைக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என இந்திய தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று கூறினார். இன்று அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர்.

Leave a Reply