இந்தியா ஏ , வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், மைசூரில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 162 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1,0 என முன்னிலை பெற்றது. அடுத்து ஷிமோகாவில் நடந்த 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் ஹூப்ளி, கே.எஸ்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புஜாரா தலைமையிலான இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர் (11 ரன்), வீரேந்திர சேவக் (7) இருவரும் கடந்த போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.

சேவக் கடைசியாக விளையாடிய 30 டெஸ்ட் இன்னிங்சில் ஒரு சதம் கூட விளாசாத நிலையில், கம்பீர் 40 இன்னிங்சில் விளையாடியும் சதமடிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கானும் ஷிமோகாவில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே, இந்த போட்டியில் இவர்கள் மூவரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க முடியும். கிர்க் எட்வர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியும் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.

இந்தியா ஏ: புஜாரா (கேப்டன்), கம்பீர், சேவக், ஷெல்டன் ஜாக்சன், அபிஷேக் நாயர், பரஸ் தோக்ரா, உதய் கவுல், முகமது கைப், பர்வேஸ் ரசூல், பார்கவ் பட், தவால் குல்கர்னி, ஜாகீர் கான், ஈஷ்வர் பாண்டே, முகமது ஷமி.

வெஸ்ட் இண்டீஸ் ஏ: கிர்க் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கெய்ரான் பாவெல், கிரெய்க் பிராத்வெயிட், ஜொனாதன் கார்ட்டர், ச்ஜெல்டன் காட்ரெல், மிகுவல் கம்மின்ஸ், நரசிங் தியோநரைன், ஆசாத் புடாடின், ஜமார் ஹாமில்டன், டெலார்ன் ஜான்சன், லியான் ஜான்சன், நிகிடா மில்லர், வீராசாமி பெருமாள், ஷேன் ஷில்லிங்போர்டு, சாத்விக் வால்ட்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *