இந்தியா ஏ , வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. பெங்களூரில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. அடுத்து ஷிமோகாவில் நடந்த 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.

இந்த நிலையில், கடைசி போட்டி ஹூப்ளி கேஎஸ்சிஏ மைதானத்தில் நடந்து வருகிறது. டாசில் வென்ற இந்தியா ஏ முதலில் பந்து வீசியது.

வெஸ்ட் இண்டீஸ் ஏ முதல் இன்னிங்சில் 268 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்தியா ஏ 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 334 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 123 ரன் விளாசி ஆட்டமிழந்தார். ஜெகதீஷ் 16, சேவக் 38 ரன்னில் வெளியேறினர்.

கேப்டன் புஜாரா 139, அபிஷேக் நாயர் 10 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். அபிஷேக் 11, கவுல் 26, ஜாகீர் 19 ரன்னில் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய புஜாரா முச்சதம் விளாசி அசத்தினார்.  இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 564 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 306 ரன் (415 பந்து, 33 பவுண்டரி), பாண்டே (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து, முதல் தர போட்டிகளில் 3 முச்சதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற பெருமை புஜாராவுக்கு கிடைத்துள்ளது.

அடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ, 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்துள்ளது. தியோநரைன் 44, புடாடின் 36 ரன்னுடன் களத்தில் உள்ளனர். அந்த அணி கைவசம் 7 விக்கெட் இருக்க இன்னும் 180 ரன் பின்தங்கியுள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில், இந்தியா ஏ அணி வெற்றியை வசப்படுத்தி 1,1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply