தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு தமிழகத்தில் இல்லை. மாணவர்கள் நிம்மதி

Entrance-Examமருத்துவ படிப்பிற்கு தேசிய நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேசிய நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லாமல், ‘ரேங்க்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவதால் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் தவே, சிவகீர்த்தி சிங், ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘மாநில அரசுகள் தங்கள் நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கையை நடத்த இந்த ஆண்டு மட்டும் அனுமதி அளிக்கலாம் என்றும் ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி அளிக்க கூடாது என்றும் தெரிவித்தார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் அவர்கள் வாதாடியபோது, “மாநில அரசுகள் தேசிய நுழைவுத்தேர்வை நடத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் பேசி வருகின்றனர். எனவே, இதுகுறித்தும் முதல்கட்ட தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்வை எழுத அனுமதி அளிப்பது குறித்தும் கருத்து தெரிவிக்க வரும் 10-ம் தேதி வரை அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘தேசிய நுழைவுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி இல்லை என்றும் உத்தரவிட்டனர். மேலும் மாநில அரசுகள் தற்போது பின்பற்றி வரும் நடைமுறைப்படி, இந்த ஆண்டு மட்டும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு பதில் தெரிவித்தபின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மீண்டும் வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *