shadow

தலித் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள். வேண்டுமானால் என்னை சுடுங்கள். பிரதமர் ஆவேச பேச்சு

Narendra-Modi-Startup-India-standup-indiaபசு காப்பாளர்கள் என்ற பெயரில் தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலித்துக்கள் மீது ஆத்திரம் இருந்தால் அவர்களை தாக்குவதற்கு பதில் என்னை தாக்குங்கள், அல்லது என்னை சுட்டுத்தள்ளுங்கள் என்று ஆவேசமாக நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் ஆவேசமாக பேசியுள்ளார்.

நேற்று ஐதராபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, ”இந்த நவீன காலத்தில் கூட தலித் சகோதரர்களை ஒதுக்குவது மற்றும் அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுவதும் அவமானகரமானது. தலித் சகோதரர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். உங்களுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால் என்னை தாக்குங்கள் அல்லது சுடவிரும்பினால் என்னைச் சுடுங்கள். தலித்துகள் மீதான இந்த விபரீத விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். நாடு முன்னேற வேண்டும் என்றால் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்க முடியாது. நாட்டின் வளர்ச்சிக்கு நாட்டின் ஒற்றுமையே முக்கியமாகும்.

சில நேரங்களில் சில சம்பவங்கள் கவனத்துக்கு வரும்போது அவை நமக்கு தாங்கமுடியாத வலியைத் தருகின்றன. தலித்துகள் நீண்ட காலமாக சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதும், மதிப்பதும் நமது பொறுப்பாகும். தலித்துகளை மோசமாக நடத்துவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? சமூகத்தில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்பதே நமது முன்னுரிமையாகும். இந்தப் பிரச்னை சமூகப் பிரச்னை என்று எனக்குத் தெரியும். கசப்புணர்வு என்ற ஆபத்தில் இருந்து தலித் சமூகத்தைக் காக்க நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஜாதி, மதம், சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் சமூகம் பிளவுபட அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தை அரசியலாக்க நடைபெறும் முயற்சிகளால் பிரச்னை மேலும் பெரிதாகவே செய்யும். இந்த விஷயத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். பிளவுபடுத்தும் அரசியலானது நாட்டுக்கு எந்த நன்மையும் பயக்காது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தலித்துகளுக்கு விரோதமான அரசு என்பதுபோல் சித்தரிக்க சிலர் முயல்கின்றனர். அவர்களின் கனவு பலிக்காது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு உரிய மரியாதை அளித்து அவருக்கு புகழ்சேர்த்து வருவது எனது தலைமையிலான அரசுதான்.

தலித்துகள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். தலித்துகளின் வாக்கு வங்கியை இழந்து வரும் சில அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாமல் தலித்துகளை கேடயமாக வைத்து என் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. தலித்துகளை காக்க வேண்டியது நமது கடமை. தலித்துகளை யாராவது தாக்க விரும்பினால் அவர்கள் முதலில் என்னை தாக்கட்டும். தலித்துகள் மீதான தாக்குதலுக்கு நாம் முடிவுகட்ட வேண்டும்” இவ்வாறு பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.

Leave a Reply