shadow

இது என்ன மாயம்.  திரைவிமர்சனம்

idhu enna maayamகிரீடம் படத்தில் இருந்து சைவம் படம் வரை பல திரைப்படங்கள் இயக்கிய இயக்குனர் ஏ.எல்.விஜய் முதன்முதலாக ஒரு முழுநீள காதல் கதையை இயக்கியுள்ளார். ஒரு காதல் கதையை இவ்வளவு ரம்மியமாக அழகாக கூட சொல்ல முடியுமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த படத்தில் பல காட்சிகள் இருக்கின்றன. குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க வைக்கும் ஒரு அழகான காதல் கவிதைதான் ‘இது என்ன மாயம்’

காதலர்களை சேர்த்து வைக்கும் ஒரு புதுமையான கம்பெனியை நடத்துகிறார் விக்ரம்பிரபு. இவர்களிடம் காதலிக்கும் பெண்ணின் பெயரை மட்டும் சொன்னால் போதும். காதலே வேண்டாம் என்று உறுதியுடன் இருக்கும் பெண்கள் கூட இந்த கம்பெனி செய்யும் செட்டப் வேலைகளால் மனம் மாறி காதலிக்க தொடங்கிவிடுவார்கள். இப்படி காதலர்களை சேர்த்து வைக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்ப்போது ஒரு பணக்கார இளைஞன் தான் மாயா (கீர்த்தி சுரேஷ்) என்ற பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண் தன்னை காதலிக்கும்படி செய்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாகவும் கூறுகிறார். இதனால் இன்ப அதிர்ச்சி அடையும் விக்ரம்பிரபு டீம் பணக்கார இளைஞர் காதலை சேர்த்து வைக்க களத்தில் இறங்குகிறது.

பணக்கார பையனை மாயா காதலிக்க பல செட்டப் வேலைகள் செய்ய ஆரம்பிக்கும்போதுதான் விக்ரம்பிரபுவுக்கு அந்த மாயா தன்னுடைய பழைய காதலி என்பது தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் விக்ரம்பிரபு, வேண்டுமென்றே இந்த ஆபரேஷன் பெயிலியர் ஆகவேண்டும் என்று தனது நண்பர்களுக்கு தெரியாமல் சதி செய்கிறார். பலகட்ட தோல்விகளுக்கு பின்னர் இந்த காதலை தன்னால் சேர்த்து வைக்க முடியாது, இந்த ஆபரேஷனை இப்போதே முடித்து கொள்வோம் என்று விக்ரம் பிரபு கூறும்போது, அந்த பணக்கார இளைஞர், விக்ரம் பிரபு ஏற்கனவே கீர்த்தி சுரேஷை காதலித்தவர் என்ற உண்மையை கண்டுபிடிக்கின்றார். இதன்பின்னர் என்ன ஆனது என்பதை ஒரு பெரிய சஸ்பென்ஸுடன் முடித்துள்ளார் இயக்குனர் விஜய்

இதுவரை ஆக்சன் படங்களில் பட்டையை கிளப்பிய விக்ரம்பிரபு, இந்த படத்தில் முதன்முதலாக ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ளார். ரொமான்ஸ் காட்சிகளில் கொஞ்சம் வழிந்தாலும், மற்ற காட்சிகளில் சமாளித்து ஒரு ஹீரோ இமேஜை காப்பாற்றி கொள்கிறார்.

கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நடிக்கத் தெரிந்த நடிகை. முதல்படம் போலவே தெரியவில்லை. நடிப்பில் அந்த அளவுக்கு முதிர்ச்சி. எந்த காட்சியிலும் குறை வைக்காமல் தனது பங்கை முழுநிறைவுடன் செய்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி, உள்பட விக்ரம் டீமில் உள்ள அனைவரின் கலகலப்பும் ரசிக்கும்படி உள்ளது. குறிப்பாக சார்லி, இது செட்டப் என்றே தெரியாமல் உண்மையான ஷூட்டிங் என நினைத்து நடிப்பது செம கலகலப்பு. நாசர், அம்பிகா இருவருமே சிறிது நேரமே வந்தாலும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் சுமார்தான் என்றாலும் பின்னணி இசை சூப்பர். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங்கும் ஓகே ரகம்.

இயக்குனர் ஏ.எல்விஜய்யின் திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை காட்சிகள் ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாவது பாதி மற்றும் கிளைமாக்ஸ் சூப்பர். கிளைமாக்ஸில் ஏற்படும் திடுக்கிடும் திருப்பம் படத்தின் அனைத்து குறைகளையும் சரிசெய்துவிடுகிறது.

மொத்தத்தில் இது என்ன மாயம், மயங்க வைக்கும் காதல் மணம்.

Leave a Reply