shadow

சிசு பாலினத்தை கண்டறியும் கருத்தில் மேனகா காந்தி திடீர் பல்டி.
menaka gandhi
ஒரு தாயின் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முயற்சிப்பது சட்டப்படி தவறு? என்ற நிலை இந்தியாவில் இருக்கும் நிலையில் கருவில் இருப்பது என்ன குழந்தை என்பதை அறிந்துகொள்ள அனுமதி அளிக்கப்படவேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த கருத்துக்கு பெரும் எதிர்ப்பு வந்ததை அடுத்து ‘நான் கூறியது யோசனை மட்டுமே, அமைச்சரவையின் பரிந்துரை அல்ல என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் சோதனைக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, ”பெண் சிசுக் கொலைகளைத் தடுப்பதற்கு, சிசுவின் பாலினத்தைப் பெற்றோர் கண்டறியும் பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும். கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை தெரிந்துகொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு கட்டாயம் அளிக்கப்பட வேண்டிய உரிமை” என்று கூறி இருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  சமூக ஆர்வலர்கள், இணைய வாசகர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ”நான் கூறியது எனது சொந்தக் கருத்து, அமைச்சரவை பரிந்துரை அல்ல” என்று மேனகா காந்தி நேற்று தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அவர்களும் ‘மேனகா காந்தியின் கருத்து அவரது சொந்த கருத்து என்றும் மத்திய அமைச்சரவையில் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து பதிவு செய்வதால், குழந்தையின் பிறப்பு வரை கண்காணிக்க முடியும் என்றும் இதனால், சிசு கொல்லப்படுவது தடுக்கப்படும்” என்று மத்திய மகளிர், குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக விவாதிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply