shadow

smartphoneசெல்போன் வரலாற்றில் இன்று முக்கிய தினம் (ஆகஸ்ட் 16) என்பது உங்களுக்குத்தெரியுமா? என்ன தினம் என்கிறீர்களா? உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமான நாள் ! ஆம், 1994 ம் ஆண்டு இன்றைய தினம் தான் உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த போனை அறிமுகம் செய்தது நீங்கள் எதிர்பார்க்ககூடியது போல நோக்கியாவோ ,மோட்டோரோலோவோ அல்ல. ஆப்பிளும் அல்ல; பிலாக்பெரியும் கிடையாது. முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது, ஒரு காலத்தில் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் மகாராஜாவாக திகழ்ந்த ஐ.பி.எம் நிறுவனம் தான்.

ஐபிஎம் பரசனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎம் அறிமுகம் செய்த சைமன் போனில் இன்னும் ஆச்சர்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

அரை கிலோ எடைக்கு ஒரு போனை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா ? ஐபிஎம்மின் சைமன் ஸ்மார்ட் போன் இந்த அளவுக்கு கணமாக இருந்தது. 23 செ.மி நீளம் கொண்ட அதை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை. கிரே நிறத்தில் சற்றே பெரிய திரையுடன்( பச்சை நிற எல்.சி.டி) இருந்த அந்த போனுக்கு ஸ்டைலசும் உண்டு. ட்ச ஸ்கிரீன் தொழில்நுட்பமும் கொண்டிருந்தது.

இந்த போனில் வேறு என்ன வசதிகள் எல்லாம் இருந்தன தெரியுமா? குறிப்புகளை எழுதுவதற்கான சாப்ட்வேர் இருந்தது. நாட்காட்டி இருந்தது. அதில் நிகழ்ச்சிகளை குறித்துக்கொள்ளலாம். இதன் வழியே பேக்ஸ் அனுப்பலாம்,பெறலாம். இவ்வளவு ஏன், செயலிகளும் (ஆப்ஸ்) இதில் இருந்தன.சில கேம்களும் இருந்தன. இதில் போனும் பேசலாம். ஆனால் இண்டெர்ண்ட் வசதி கிடையாது.

இதெல்லாம் ஒரு ஸ்மார்ட் போனா ? என்று அலட்சியமாக கேட்கலாம். ஆனால், 1994 ல் இது மிகப்பெரிய விஷயம் என்பதை நினைவில் கொள்ளவும்.  அந்த கால கட்டத்தில் இணையத்தில் உலாவுவதற்கான பிரவுசர்களே இன்னும் முழுவீச்சில் அறிமுகமாகி இருக்கவில்லை. இந்த நிலையில் அப்போது பிரபலமாக இருந்த கையடக்க கம்ப்யூட்டர்களான பிடிஏக்களின் அம்சங்களோடு போனும் இணைந்ததாக அமைந்திருந்த கிட்டத்தட்ட தொழில்நுட்ப புரட்சி என்று சொல்லலாம். அந்த வகையில் கையடக்க கம்யூட்டரையும், செல்போனையும் கைகுலுக்க வைத்த முதல் சாதனம் இது தான். அதனால் தான் முதல் ஸ்மார்ட் போன் அந்தஸ்து. பெல் செல்ப் எனும் செல்போன் சேவை நிறுவனத்துடன் இணைந்து இதை ஐபிஎம் அறிமுகம் செய்தது. இந்த போனுக்கான மாதிரி 1992ல் காம்டெக்ஸ் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட் போனின் விலை தெரியுமா?  899 டாலர்கள். அதிலும் 1994ல் இந்த விலை! அந்த கால வர்த்தக புள்ளிகள் இதை மிகவும் விரும்பினர். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேல் இந்த போன் சந்தையில் நீடிக்கவில்லை. இதன் பேட்டரி ஆயுள் ஒரு மணி நேரம் தான் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சைமன் ஸ்மார்ட் போன் மறக்கப்பட்டிருக்கலாம் ,வர்த்தக நோக்கில் வெற்றிபெறாமல் போயிருக்கலாம். அதனால் என்ன, செல்போன் வரலாற்றில் அது ஒரு மைல கல் என்பதில் சந்தேகமில்லை.

இதை அங்கீகரிக்கும் வகையில் லண்டன் விஞ்ஞான அருங்காட்சியகத்தில் இந்த போன் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றை குறிக்கும் நிரந்தர கண்காட்சியில் இந்த போன் உள்ளிட்ட மைல்கல் சாதனங்கள் இடம்பெற உள்ளன. அக்டோபரில் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது.

சைமன் போன்கள் அமெரிக்காவில் மட்டுமே விற்பனையாகின. மொத்தல் 50,000 போன்களே விற்கப்பட்டன. இந்த போன்களில் ஒன்றை ஏல தளமான இபேவில் விஞ்ஞான அருங்காட்சியகத்தால் பெருந்தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி கடந்த கால தொழில்நுட்ப உலகம் பற்றிய நினைவூட்டலாக இருக்கும் என்கிறார் கண்காட்சி பொருப்பாளரான சார்லெட்டே கானெல்லி

Leave a Reply