shadow

டாஸ்மாக் கடையை மூடுவேன். மது குடித்து கொண்டே அருள்வாக்கு கூறிய சாமியார்

tasmacஒருபக்கம் டாஸ்மாக் கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்ற போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் சாமியாடி ஒருவர் டாஸ்மாக் கடைகளை விரைவில் மூடுவேன் என்று அருள்வாக்கு அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே தோப்பு தெருவில் உள்ள ஸ்ரீமாளிகைபாறை கருப்பசாமி  கோவிலில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆடி அமாவாசை  விழாவில், ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். சாமிக்கு மாலை அணிவித்தல், கிடா பலியிடுதல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். மேலும் சாமிக்கு காணிக்கையாக டாஸ்மாக் கடையில் வாங்கப்பட்ட ஃபுல், ஆஃப், குவாட்டர் மது பாட்டில்களும் நூற்றுக்கணக்கில் காணிக்கையாக குவிக்கப்பட்டு கிடந்தது.

இந்த நேரத்தில் முருகன் என்பவர் சாமியின் அருள் வந்து ஆடினார். திடீரென இரண்டு பக்தர்கள் பிடித்திருக்கும் அரிவாள் மீது ஏறிய அவர், அதில் நின்றவாறே மது பாட்டில்களை திறந்து மட மடவென குடித்தார்.  இடையிடையே சைடிஷ்ஷாக அவருக்கு மட்டனும் கொடுக்கப்பட்டது. இந்த சரக்கு பத்தாது என்று மொத்த சரக்கையும் ஒரு பாத்திரத்தில் ஊத்தி கணக்கில்லாமல் குடித்த சாமி பின்னர் அருள்வாக்கு கூறியது. பக்தர்கள் தங்கள் குறைகளை கேள்விகளாக கேட்க அதற்கு சாமி அருள்வந்தவர் பதில் கூறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் ஒரு பக்தர், ”தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து பல அரசியல் கட்சிகளும் போராட்ட களத்தில் குதித்துள்ளன. அப்படி இருக்கும்போது நீங்க குடிக்கிறீர்களே..?” என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சாமி, ”சாராயம் அல்லது கள், பதனீர் தருவதுதான் வழக்கம். இப்போ அது கிடைக்காததால் மதுவை கொடுக்குறாங்க. அது கிடைத்தால், பழையபடி அதைதான் கொடுப்பாங்க. சாமியும் டாஸ்மாக் கடையை மூடனும்னுதாம்பா விரும்புறேன். நிச்சயமா அதையெல்லாம் மூடிவிடுவேன் கவலைப்படாதீங்க” என்று கூறினார். எது எப்படியோ, அரசியல் கட்சிகளின் போராட்டத்தினால் மூட முடியாத டாஸ்மாக்கை, சாமி மூடினால் நல்லதுதான் என விழாவுக்கு வந்திருந்தவர்கள் பேசுக்கொண்டனர்.

Leave a Reply