shadow

14கடந்த பாராளுமன்ற தேர்தலில் சரியாக கட்சிப்பணிகளை கவனிக்கவில்லை என்ற காரணம் கூறி முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தனக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும், இனி மனதில் தோன்றுவதை தைரியமாக வெளியில் பேசலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முல்லைவேந்தன் கூறியதாவது: “கடந்த 15 ஆண்டுகளாக எனக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்து எந்த கட்சி பணியையும் செய்யவிடாமல் முடக்கி வைத்திருந்தனர். இப்போது எனக்கு நல்லதை செய்துள்ளனர். இனி நான் சுதந்திரமாக எங்கும் எதையும் பேசலாம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நான், கே.பி.ராமலிங்கம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் உள்பட பல பேருக்கு கட்சி நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் மீது வந்துள்ள புகார்கள் எல்லாம் காழ்ப்புணர்ச்சி காரணமாக வந்த புகார்கள் என விளக்கம் எழுதி கொடுத்ததை தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பொது செயலாளர் அன்பழகன் கூறினார்.

அப்படி காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் கூறியிருந்தவர்கள் மீதும் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா தளி பகுதியில் கட்சியை வளர்த்தேன். இதை அவர்கள் மறந்து விட்டார்கள். சிறகை உடைத்து விட்டு பறக்க சொல்பவர்கள் அவர்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக மாவட்டத்தில் எதையும் செய்யவிடாமல் தடுத்துக் கொண்டு கொத்தடிமைகளாக வைத்திருந்தார்கள். கடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள் மீது இந்த கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் எல்லாம் இன்றும் தங்களை தி.மு.க.வினர் எனக் காட்டிக்கொள்கின்றனர். இனிமேல் மாவட்டத்திற்கு செய்ய வேண்டிய பணிகளை சுதந்திரமாக செய்யலாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply