shadow

ஆட்டோ டிரைவரை அடித்தது உண்மையா? மு.க.ஸ்டாலின் விளக்கம்
stalin
‘நமக்கு நாமே’ பயணம் செய்து வரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ டிரைவர் ஒருவரை அடித்ததாக வெளியாகியுள்ள வீடியோ ஒன்று நேற்று முதல் ஊடகங்களிலும், இணையதளங்களிலும் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் கூறிய மு.க.ஸ்டாலின், ‘மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என நான் கட்சியினரை அதட்டுவது உண்மை தான். ஆனால் நான் யாரையும் அடிக்கவில்லை. திட்டமிட்டு கிராபிக்ஸ் செய்து வீடியோவை பரப்பி வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து இன்று காலை செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின், “”ஆட்டோ டிரைவரை தாக்கியதாக வெளியான வீடியோ திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களை சந்திக்க இடையூறாக இருக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். அதையும் மீறி மக்களை சந்திக்க இடையூறாக இருப்பவர்களை நான் கடுமையாக அதட்டுவது உண்மை தான்.

ஆனால் அதை அரசியலாக்க, கிராஃபிக்ஸ் செய்து இந்த வீடியோவை பரப்பி வருகிறார்கள். எப்படி ஜெயலலிதா, சிறுதாவூர் பங்களாவில் இருந்து கொண்டு, அரசு பணிகளை செய்வதாக கிராஃபிக்ஸ் செய்து படத்தை வெளியிடுகிறார்கள், அதேபோல் இதையும் செய்து வருகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினிடம் அடிவாங்கியதாக கூறப்படும் திலீப் என்ற ஆட்டோ டிரைவர், “‘வாட்ஸ் அப், ஃபேஸ் புக் போன்ற வலைதளங்களில் தளபதியை அவமானப்படுத்தும் வகையில் ஒரு வீடியோ தவறாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அந்த வீடியோ தவறானது. அந்த வீடியோவுக்கும் எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply