சென்னை டி.பி.சத்திரம் வ.ஊ.சி. நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). இவர் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்கிறார். இவரது மனைவி பெயர் நிர்மலா (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நிர்மலா பி.ஏ. பட்டதாரி. ஆனால் அவர் வேலைக்கு போகவில்லை. ஏழுமலை வசதி படைத்தவர். கடந்த அக்டோபர் 17-ந் தேதியன்று ஏழுமலை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவரது கழுத்திலும், நெற்றியிலும் காயங்கள் இருந்தன. அவர் வெளியில் சென்றுவிட்டு வந்ததாகவும், அப்போது விபத்தில் சிக்கி அடிபட்டிருக்கலாம் என்றும், உடலில் பட்ட காயத்தோடு அவர் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார் என்றும், தூக்கத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் நிர்மலா டி.பி.சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார்.

இன்ஸ்பெக்டர் ராயப்பன் இதுதொடர்பாக இ.பி.கோ. 174 என்கிற மர்ம சாவு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஏழுமலையின் பிணம் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்து முடிந்தன.
ஏழுமலையின் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராயப்பன் உடனடியாக அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தார். ஆனால் அந்த தகவலை வெளியில் சொல்லாமல் ரகசியமாக விசாரணை நடத்தினார்.

புலன் விசாரணையில், ஏழுமலையின் மனைவி நிர்மலாவே அவரது கள்ளக்காதலன் செல்வம் (45) என்பவருடன் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. செல்வம் அதே பகுதியில் ஆட்டோ டிரைவராக உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய முயன்ற போது அவர் தப்பிஓடிவிட்டார். பின்னர் அவர் நேற்று முன்தினம் பொன்னேரி கோர்ட்டில் சரணடைந்துவிட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் போலீசார் நேற்று நிர்மலாவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் ஏழுமலை கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், ஆட்டோ டிரைவர் செல்வமும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எனது வீட்டுக்கு எதிரில்தான் ஆட்டோவை செல்வம் நிறுத்தி இருப்பார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நாங்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்போம்.

எங்கள் கள்ளக்காதல் விவகாரம் எனது கணவருக்கு தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். அவருக்கு நிறைய சொத்துகள் உள்ளன. கள்ளக்காதலை விடாவிட்டால் சொத்துகள் அனைத்தையும் தனது அண்ணன் குடும்பத்தினருக்கு எழுதி வைத்துவிடுவேன் என்று எனது கணவர் மிரட்டினார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டோம்.

எங்களது திட்டப்படி அக்டோபர் 17 ஆம் தேதியன்று பகல் 12.30 மணியளவில் எனது கணவர் ஏழுமலை வீட்டுக்கு சாப்பிட வந்தபோது கொலை செய்யப்பட்டார். செல்வமும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து ஏழுமலையை கழுத்தை நெரித்துக்கொன்றனர். பின்னர் அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக நாடகமாடினேன்.

அவரது இறுதி சடங்குகளை முடித்துவிட்டு ஒன்றும் தெரியாதவள் போல் இருந்தேன். ஆனால் உண்மையை போலீசார் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துவிட்டனர் என்று நிர்மலா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

நிர்மலா நேற்றிரவு நீதிமன்ற காவலில் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் என்றும், ஆட்டோ டிரைவர் செல்வத்தின் கூட்டாளிகள் 3 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply