shadow

hair split

முடி உதிர்தல், நரை, பொடுகு, சிக்கு என தலைமுடியில் எந்தப் பிரச்னை வந்தாலும், உடனே, ‘என்ன செய்யலாம்… எதைத் தடவினால் சரியாகும்?’ என்று ஆளாளுக்கு சொல்லும் ஆலோசனைகளைப் பின்பற்றுவது பலருக்கு வழக்கம். இப்போது, ‘ஸ்பிளிட் ஹேர்’ என்ற முடிப் பிளவுதான் பலருக்கும் ‘தலை’ போகிற பிரச்னை. புரியாத புதிராக இருக்கும் ‘முடிப் பிளவு’ பற்றியும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் எளிமையாக கூறுகிறார் சேலம் ஷிவானி பியூட்டி பார்லர் வைத்திருக்கும், ஆயுர்வேத மருத்துவ பயிற்சி பெற்ற அழகுக் கலை நிபுணர் சுமதி.

‘கூந்தல் பராமரிப்பு என்றாலே, இன்று அனைவரும் நாடுவது, விலை உயர்ந்த தரமான அழகு சாதனங்களைத்தான். இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினாலுமே, பலருக்கும் ஏற்படக்கூடிய பெரும் பிரச்னை முடிப் பிளவுதான். நுனி முடிப் பிளவை உடனடியாகக் கவனிக்காமல் போனால், ஒட்டுமொத்தக் கூந்தலின் வளர்ச்சியும் பாதிப்படைய வாய்ப்பு உண்டு.

இந்தப் பிரச்னைக்கு நாம்தான் காரணம். முடியில் ஏற்படக்கூடிய வறட்சியால்தான் முடிப் பிளவு ஏற்படுகிறது. இதற்கு என்ன ஷாம்பு, கண்டிஷனர் போடுவது என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். வெறும் தண்ணீராலேயே இதைச் சரிப்படுத்திவிடலாம். தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதால் மட்டுமே வறட்சி சரியாகிவிடாது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்துவந்தால் சருமம் மற்றும் முடியில் ஏற்படக்கூடிய வறட்சியை விரட்டிவிடலாம்.

ஷாம்பு

முடிப் பிளவுக்கு ஷாம்புவைப் பயன்படுத்துவிதமும் ஒரு காரணம். ஷாம்பு பயன்படுத்தும்போது முடியில் வறட்சி ஏற்படக்கூடும். ஷாம்புக்களில் அதிக அளவில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதுதான் இதற்குக் காரணம். முடியின் தன்மையைப் பொருத்தே பாதிப்புகள் இருக்கும்.

ஷாம்புவால் ஏற்படும் பாதிப்புகளை விட, அதை சரியாகப் பயன்படுத்தாததால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்தான் அதிகம். ஷாம்புக்களை தண்ணீரில் கரைத்துத்தான் பயன்படுத்தவேண்டும். ஆனால், அவசரகதியில் குளிக்கச் சென்று, அப்படியே தலையில் நேரடியாகப் பயன்படுத்துகின்றனர். மேலும், ஷாம்புவை வெறும் தலையில் பயன்படுத்தக் கூடாது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் தடவி ஊறவைத்த பிறகுதான் குளிக்க வேண்டும். இதை முறையாகப் பின்பற்றினால் பாதிப்புகள் குறையும். இதை செய்யத் தவறும்போது முடி வறட்சி, முடி கொட்டுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

 டிரையர்

முடி சீக்கிரம் காய வேண்டும் என்பதற்காக, நிறையப் பெண்கள் டிரையர் பயன்படுத்துவார்கள். டிரையர் பயன்படுத்துவதனால் நம் தலையில் இருக்கக்கூடிய மெலனின் தன்மை குறைந்து, முடி வறண்டு போய்விடும். முடிப் பிளவில் இருந்து முடி உதிர்வது வரை அனைத்துமே டிரையர் பயன்படுத்துவதால் ஏற்படலாம். எனவே, அதை முற்றிலும் தவிர்த்து விடலாம்.

 கலரிங்

முடிக்கு கலரிங் செய்துகொள்வது இன்று ஃபேஷன். ஆனால் எதிர்காலத்தில் முடியின் இயற்கைத்தன்மையை மீட்பது மிகவும் கடினமாகிவிடும். அடிக்கடி ஹேர் கலரிங் செய்து கொள்வதால், முடியின் தன்மையும், ஸ்கால்ப்பும் வறண்டுபோய்விடும். இதனால் நிச்சயம் முடிப் பிளவு ஏற்படும். ஹேர் கலரிங் போலவே ‘ஸ்ட்ரீக்கிங்’ என்ற ஒரு வகையான கலரிங் இருக்கிறது. இது சாதாரண ஹேர் கலரிங்கை விட நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். முடிப் பிளவை சரி செய்யாமல் இதைப் போடும் போது, முடி, இரண்டாகவோ, மூன்றாகவோ வேர் வரை கிழிந்துவிடும். நாளடைவில் முடியின் அடர்த்தியும் குறைந்து, நார் போல் ஆகிவிடும். எனவே, கூடுதல் கவனம் தேவை.

முடிப் பிளவுக்குத் தீர்வு!

வீட்டிலேயே தயாரிக்கும் மூலிகை எண்ணெயைத் தலையில் தடவி, நன்றாக மசாஜ் செய்யலாம்.

ஈரக் கூந்தலுடன் தலையை வாரக் கூடாது. கைகளால் முடியைக் கோதியபடியே காயவைப்பது ஒன்றே முடிக்கான பாதுகாப்பு.

தினமும் காலையில் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காய் முடி உதிர்வதில் இருந்து முடி பிளவுபடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்தி, முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மாதம் ஒரு முறை முடியை, பிளவின் வேர் வரை ‘ட்ரிம்’ செய்துகொள்ள வேண்டும்.

அரை கப் தேங்காய்ப் பாலுடன்,  பொன்னாங்கண்ணிக் கீரை அரைத்த ஜூஸ் அரை கப் கலந்து இதில் சிறிது பயத்தமாவைச் சேர்த்து தலைக்கு ‘பேக்’ போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். வாரம் இரண்டு முறை இதுபோல் செய்துவந்தால், வறட்சி, பிளவு இல்லாமல் முடி நன்கு வளரும்

Leave a Reply