house1 copy  பெரிய நகரங்களில் ஃப்ளாட்களில் வசிப்பவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை இடப்பற்றாக்குறை. சிங்கிள் பெட்ரூம் அல்லது டபுள் பெட்ரூம் ஃப்ளாட்களில் ஐந்து, ஆறு பேர்கள் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம். தற்போது ஃப்ளாட்கள் விற்கும் விலையில் கூடுதல் இடவசதி பெறும் நிலை பலருக்கும் இல்லை என்கிறபோது இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு என்று தெரியாமல் தவிப்பவர்கள் பலர். ‘‘கவலையை விடுங்க. இருக்கிற இடத்தை இன்னும் புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் தீர்ந்தது பிரச்னை’’ என்கிறார் எஸ்.ராம். இவரது ஸ்பெஷாலிட்டியே இடப்பற்றாக் குறையைத் தீர்க்க குறைந்த செலவில் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதுதான். அவரைச் சந்திக்க அவர் வீட்டுக்குப் போனோம்.

 தேவையினால் வந்த யோசனை!

இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுதான் அவருடையது. அந்த வீட்டுக்குள் நுழைந்ததும் அப்படியொரு இடவசதி கண்ணுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து சாமான்களும் அவரின் வீட்டில் இருந்தது. தவிர, வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை என அனைத்திலும் ஏராளமான இடவசதிகளைப் பார்க்க முடிந்தது. எப்படி இவ்வளவு இடவசதி, எப்படி இது சாத்தியம் என நாம் அவரிடம்  கேட்க, சிரித்தபடி பேச ஆரம்பித்தார்.
 
“ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தக் குடியிருப்புக்கு வந்தபோது இங்கிருந்த இடவசதி எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாக ஆனபின், எங்கள் தேவைக்கான இடம் போதவில்லை. அதுமட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் என்று வரும் போது மிகவும் சிரமமாகவே இருந்தது.

இதற்கு மாற்றாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். அந்த யோசனையினால் கிடைத்த பலன்தான் இது. இன்று உறவினர்கள், நண்பர்கள் வந்தாலும் இந்த இரண்டு படுக்கை அறை கொண்ட வீட்டிற்குள்ளேயே ஓடி ஆடி விளையாட முடிகிறது” என்றவர் இடப்பற்றாக் குறையைக் குறைக்க மேற்கொண்ட யுக்திகளை எடுத்துச் சொன்னார்.

house2

  600 கிலோ வரை எடை தாங்கும்!

“நான் செய்த முதல் வேலை வீட்டுக்குள் இருந்த கட்டில், மெத்தைகளை அப்புறப்படுத்தியதுதான். அதற்குப் பதிலாக ஒரு படுக்கை அறையில் குழந்தைகள் இருவருக்கும் தனித்தனியான படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். இவர்களின் கட்டிலும் மெத்தையும் இரவு நேரங்களில் மட்டும்தான் பயன்படுகிறது என்பதால், பகல் நேரங்களில் அவற்றை மடித்து வைத்துக்கொள்ளும்படியான அமைப்பை உருவாக்கினேன்.

12-க்கு 11 அடி கொண்ட படுக்கை அறையில் 6-க்கு 6 அடி அளவில் தனியாக அறை அமைக்க தீர்மானித்தேன். இந்த சிறிய அறையானது முன்னமே இருந்த படுக்கை அறையைப் பாதிக்காமல் அமைக்க வேண்டும் என்பதால், அறையின் மேல் சுவரில் இருந்து 3.3 அடி கீழாக அறை அமைக்க முடிவு செய்து, அதற்கு தேவையான பலமான மரப்பலகைகள், ஆங்கிள்கள் எல்லாம் ஆர்டர் செய்து முறையாகச் செய்து முடித்தேன். தற்போது அந்த அறையை நாங்கள் நால்வரும் படுப்பதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். அந்த அறைக்குப் பயன்படுத்திய பலகைகள் 600 கிலோ வரை எடை தாங்கக்கூடிய தன்மை கொண்டவை என்பதால், கீழே விழுந்துவிடுவோமோ என்கிற பயம் எங்களுக்கு இல்லை.

house3

 நல்ல வரவேற்பு கிடைத்தது!

அதேபோலத்தான் வரவேற்பு அறை யிலும் இடவசதி கொண்டதாக அமைக்க முடிவெடுத்த நான், அங்கிருந்த டைனிங் டேபிள் அமைப்பை மாற்றியமைத்து இடத்தை மிச்சப்படுத்தினேன். அதன்பின் வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் என் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இன்னும் சிலர் எங்களுக்கும் இதுபோன்ற அறையை அமைத்துக் கொடுங்கள் என்று கேட்டார்கள். இதற்கான வரவேற்பு பிரகாசமாய் இருக்க தற்போது இதை என் முழுநேர தொழிலாகவே மாற்றிக் கொண்டேன்.

 செலவு 70,000 ரூபாய்!

சென்னையில் உள்ள முப்பது குடியிருப்புகளுக்கு இதுபோன்ற அமைப்பில் படுக்கை அறைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த 6-க்கு 6 அடியில் அறைகளை அமைக்க பலகை, இரும்பு ஆங்கிள் என எல்லாம் சேர்த்து 70,000 ரூபாய் வரை செலவாகும். அதுபோக போரூரில் இருந்து இந்தப் பொருட்களை எடுத்துவரும் போக்குவரத்து செலவு தனி. படுக்கை அறையின் அளவு பெரிதாக இருந்து வாடிக்கையாளர்களின் தேவையும் அதிகமாக இருந்தால் அமைக்கும் அளவுக்கு ஏற்ப செலவும் வித்தியாசப்படும்.

இந்தமாதிரியான படுக்கை அறை அமைக்க வேண்டுமென்றால், படுக்கை அறையின் உள் உயரமானது குறைந்தது 9.5 அடியாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் 6.2 அடியை விட்டுவிட்டு, மேல் படுக்கை அறையை 3.3 அடிக்கு அமைக்க முடியும்.

பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், தனி குடியிருப்பாக இருந்தாலும் 9.5 அடி விட்டுக் கட்டுவதே வழக்கமாக இருக்கிறது. அல்லது சொந்தமாக வீடு கட்டும்போதே இந்த அமைப்பைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அவரவர்களின் வசதிக்கேற்ப படுக்கை அறையின் உயரத்தை அதிகப்படுத்தி கட்டிக் கொள்ளலாம்” என்று முடித்தார்.

குடியிருப்புகளில் இடவசதி போதவில்லை என்று நினைப்பவர்கள் குறைந்த முதலீட்டில் இந்த மாற்று முறையைப் பற்றி  முயற்சிக்கலாம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *