shadow

விக்கிப்பீடியாவில் உறுப்பினர் ஆவது எப்படி?

wikiவிக்கிப்பீடியா நிச்சயம் நீங்கள் நன்கு அறிந்த தளம்தான். கட்டற்றக் களஞ்சியமான அதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்திக்கொண்டிருக்கவும் செய்யலாம்.

சரி. விக்கிப்பீடியா பயனாளியான நீங்கள் எப்போதாவது விக்கிப்பீடியாவில் உறுப்பினராவது பற்றி யோசித்திருக்கிறீர்களா?

எந்த ஒரு அனுமதியும் தேவைப்படாத சேவையாகவே விக்கிப்பீடியா இருப்பதால் உறுப்பினராகாமலேயே அதைப் பயன்படுத்தலாம். அதன் கட்டுரைகளை வாசிக்க மட்டும் அல்ல, அவற்றைத் திருத்தவும் பயனாளியாக இருந்தாலே போதுமானது. உறுப்பினராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கட்டற்றக் களஞ்சியம் என்பதால் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்பது விக்கிப்பீடியாவின் சிறப்பாக இருக்கிறது.

இருந்தாலும் விக்கிப்பீடியாவில் உறுப்பினராவது மூலம் கூடுதல் பலன்களைப் பெற முடியும் தெரியுமா?

இணைப்புகளின் முன்னோட்டம்

விக்கிப்பீடியாவில் இடம்பெறும் எல்லா கட்டுரைகளும் மற்ற பல கட்டுரைகளுக்கான இணைப்புகளைக் கொண்டவை. இவற்றில் பல சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இணைப்பாக ‘கிளிக்’ செய்து படித்துப் பார்ப்பது கொஞ்சம் சோதனையான அனுபவமாகத்தான் இருக்கும்.

இதற்கு மாறாக இணைப்புகளின் உள்ளடக்கத்தைச் சுருக்கமான அறிமுகத்தோடு முன்னோட்டமாகப் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும். இதற்கென உள்ள ‘ஹோவர்கார்டு’ வசதியை உறுப்பினர்கள் ‘ப்ரிஃபெரென்ஸ்’ பகுதிக்குச் சென்று வரவைத்துக் கொள்ளலாம்.

இதே பகுதியில் சென்று தொடர்புடைய கட்டுரைகள் அம்சத்தை கிளிக் செய்தால், ஒவ்வொரு கட்டுரையின் அடிப்பக்கத்திலும் தொடர்புடைய கட்டுரைகளுக்கான இணைப்புகளைப் பார்க்க முடியும். இந்த வசதி மூலம் விக்கிப்பீடியாவில் புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ‘டேப்’ இணைப்புகள்

விக்கிப்பீடியா கட்டுரைகள் ஆதாரங்களுக்கான அடிக்குறிப்புகளைக் கொண்டிருப்பவை. தகவல்களின் நம்பகத்தன்மையை உணர்த்துவதற்காக இவை கைகொடுக்கின்றன‌. ஆனால் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது, இணைப்புகளில் கிளிக் செய்தால் அந்தப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். மீண்டும் கிளிக் செய்து மூல கட்டுரைக்குத் திரும்பி வரவேண்டும்.

இந்தச் சங்கடத்தைத் தவிர்க்க, ‘ப்ரிஃபெரென்ஸ்’ பகுதிக்குச் சென்று பிரவுசிங் அம்சத்தில் இணைப்புகளைத் தனியே புதிய ‘டேப்’ ஆகத் தோன்றும் வசதியை இயக்கிக் கொள்ளலாம்.

வெவ்வேறு பின்னணி

விக்கிப்பீடியா கட்டுரைகளின் தோற்றம் உங்களுக்கு அலுப்பூட்டலாம். எனில் வேறு பல பின்னணி வண்ணங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு நான்கு விதமான வசதிகள் இருக்கின்றன.

விளம்பரம் நீக்கும் வசதி

அதே போல விக்கிப்பீடியாவை ஆண்டுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய நன்கொடை கோரும் விளம்பர அறிவிப்பையும் நீக்கிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேலும் நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் கட்டுரையின் பக்கத்தை, கவனிக்க விரும்பும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் அந்தப் பக்கத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.

இந்த வசதியை உங்களுக்குப் பிடித்தமான கட்டுரைகளுக்கான ‘புக்மார்க்’ வசதி போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற உறுப்பினர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல குறிப்பிட்ட தலைப்பைப் பின் தொடரும் ஆர்வம் இருந்தால் அந்தத் தலைப்பு தொடர்பான அறிவிப்புகளைக் கவனிக்க விரும்பும் பட்டியலில் பெற ஏற்பாடு செய்யலாம். கட்டுரை பக்கத்தின் மேல் உள்ள கவனிப்புப் பட்டியல் ஐகானை கிளிக் செய்து அந்தக் கட்டுரையை நமக்கான பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் ஆண்டின் சிறந்த ஒளிப்படம் போன்றவற்றின் மீது வாக்களிக்கும் உரிமையும் பெறலாம். இப்போது இணைந்தால் கடந்த ஆண்டுக்கான ஒளிப்படங்கள் மீது வாக்களிக்கலாம். மேலும் பல அம்சங்களும் இருக்கின்றன.

புதிய பக்கங்களைத் தொடங்குவது, பெயர் மாற்றம் செய்வது ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். உங்களுக்கான பயனர் பெயரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

வாசிப்பதை மீறி , விக்கிப்பீடியா தன்னார்வலர்கள் சமூகத்தில் இணைந்து கொள்ளுங்கள் என்று விக்கிப்பீடியா உறுப்பினர் பக்கத்தில் அழைப்பு விடுக்கிறது.

Leave a Reply