shadow

15நண்பர் ஒருவர் வெளி மாநிலத்தில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றார். வெகுநேர ரயில் பயணம் என்பதால் அவரது அலைபேசியில் சார்ஜ் தீர்ந்துவிட்டது. அந்த ஊரில் அவருக்குத் தெரிந்த ஒரே நண்பரது எண்ணும் அவரது அலைபேசியில்தான் இருந்தது. அவருக்கு நினைவில் இல்லை. ஒருவழியாக நண்பரைத் தொடர்பு கொள்வதற்குள் படாதபாடு பட்டு விட்டார்.

நூற்றுக்கணக்கான எண்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞான வளர்ச்சிதான். ஆனால், அதன் காரணமாக நாம் நமது நினைவுத் திறனை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்துக் கொண்டு வருகிறோம். எத்தனை பேருடைய தொலைபேசி எண்கள் நமக்கு நினைவில் இருக்கிறது?

ஒரு சதுர செ.மீ. அளவுள்ள ஒரு மெமரி கார்டை 1.36 கிலோ மூளைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஜிபி(GB)க்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட அருமை யான சாதனம் நம் மூளை. திவ்ய பிரபந்தப் பாடல்கள் நாலாயிரம், குர்ஆன், பைபிள் என்று மனப்பாடமாகச் சொல்பவர்கள் பலரைப் பார்க்கிறோம். நினைவுத் திறனில் மட்டும் இவ்வளவுதான் நம் எல்லை என்று வைத்துக்கொள்ளாதீர்கள். பயிற்சி செய்தால் அலாவுதீன் பூதம்போல, மூளை நமக்கு கைகட்டி சேவகம் செய்யும்.

சின்னச் சின்னப் பயிற்சிகளாகத் தொடங்குங்கள். தெருவில் போகும்போது வரும் கடையின் பெயர்களை எல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளப் பழகுங்கள். 10 கடைகள் வந்ததும் வரிசையாக நினைவுபடுத்துங்கள். கொஞ்சம் பழகியபின் 20 கடைகள் ஆக்குங்கள். நடந்து செல்லும்போது இது வேண்டாம். கடை போர்டை பார்த்துக்கொண்டே யார் மீதாவது முட்டிக்கொள்ள நேரிடும். சைக்கிளில் அல்லது டூவீலரில் பின்னால் உட்கார்ந்து போகும்போது செய்வது நல்லது. செய்தித் தாள் படிக்கும்போதே செய்தியில் இடம் பெற்றிருப்பவர்களின் பெயர்கள், வயது, சம்பவம் நடந்த தேதி என்றெல்லாம் படித்துப் பழகலாம்.

இணையத்தில் எல்லா தகவல்களும் கொட்டிக் கிடக்கின்றன. தமிழகத்தின் 39 மக்களவை உறுப்பினர்களின் பெயரைப் படிக்கலாம். அதன்பிறகு 234 சட்டமன்ற தொகுதிகள். தனிம அட்டவணை (PERIODIC TABLE), எண்களுடன் திருக்குறள்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. கொஞ்சம் போரடித்தால் ஏதேனும் ஒரு வருடத்தில் வெளிவந்த திரைப்படங்களின் இயக்குநர், இசையமைப்பாளர் பெயர்களை நினைவில் வைத்துப் பழகலாம். பாடல் வரிகளை முழுமையாக மனப்பாடம் செய்து பாடலாம். வெறும் தகவல்களாக மனப்பாடம் செய்வதைவிட ஒரு விஷயத்தைப் பற்றி அதிகமான விவரங்களைப் படியுங்கள்.

உதாரணமாக ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள், அதை அவர் கண்டுபிடித்த வரலாறு , அதற்காகப் பட்ட கஷ்டங்கள், அவரது வளர்ச்சி என்று பல விவரங்களைப் படித்தால் ஐன்ஸ்டைன் பற்றிய தகவல்கள் ஒரு தொகுப்பாக நினைவில் நிற்கும். ஆனால் இவை நீண்டகாலப் பயிற்சி. தினமும் செய்துவந்தால்தான் தேர்வு நேரத்தில் பலன் தரும். அதை விட்டுவிட்டு, தேர்வுக்கு முந்தைய நாள் சச்சின் அடித்த ஸ்கோர்களை மனப்பாடம் செய்யப் போகிறேன் என்று உட்கார்ந்தால் க்ளீன் போல்டாகி விடுவோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *