shadow

Headache-2459907-350x250

வாழ்க்கையில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும் ‘வரட்டும் பார்த்துக்கலாம்’ என டீல் செய்பவர்கள்கூட, தலைவலி வந்தால் டென்ஷனாகிவிடுகிறார்கள். டென்ஷன்தான் தலைவலிக்கு முக்கியக் காரணம் என்றாலும், பலருக்குத் தலைவலிதான் டென்ஷனுக்கான காரணம். `இது சாதாரணத் தலைவலிதானா, இல்லை மூளையில் ஏதாவது கட்டி வந்திருக்குமா?’ எனப் பதற்றம் வந்துவிடும். வேலையில் கவனம் இன்மை, உடன் இருப்பவர்களிடம் சரியான உறவு இல்லாமல்போவது என, தலைவலி உருவாக்கும் கிளை வலிகள் அநேகம். வாழ்க்கையில் ஒருமுறையாவது தலைவலியை அனுபவிக்காதவர்கள் குறைவு.

 

எந்தத் தலைவலியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்? எல்லா தலைவலிகளும் ஆபத்தானவையா? தலைவலி வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

 

ரத்த அழுத்தம்

தலைப்பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் சீரற்று இருப்பதன் காரணமாகவே, தலைவலி ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் , தலைவலி  வராது. பெரும்பாலும், மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது, தலைவலி அதிகமாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், முதலில் ரத்த அழுத்தத்தைச் சோதித்துக்கொண்டு, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் உட்கொண்டாலே போதும். தலைவலி சரியாகிவிடும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் (ப்ரீடயபட்டீஸ்) இருப்பவர் களுக்கு அடிக்கடி தலைவலி வந்தால், சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக, சர்க்கரை அளவு திடீரென குறைவதோ, அதிகரிப்பதோ கூடாது. சர்க்கரையின் அளவு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது, தலைவலி ஏற்படும். எனவே, குறிப்பிட்ட நேரத்துக்குச் சரியாகச் சாப்பிட வேண்டும். சர்க்கரை அளவு காரணமாகத்தான் தலைவலி ஏற்படுகிறது எனில், வாழ்வியல்முறைகளை மாற்றிக்கொண்டாலே போதும். தலைவலிக்காக மாத்திரை சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

கண் வலி

கணினி, மொபைல் என எலக்ட்ரானிக் பொருட்களுடன் பெரும்பாலான நேரத்தைச் செலவழிப்பவர்களுக்கு, கண்களில் உள்ள நரம்புகள் பாதித்து, பார்வை மங்கலாகும். அதன் அறிகுறிதான் தலைவலி. 30 வயதைக் கடந்தவர்கள், கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு தினமும் தலைவலி ஏற்படுகிறது எனில், முதலில் கண் பரிசோதனை அவசியம். கண்களில் ஏற்படும் நரம்புப் பாதிப்புகள் காரணமாக, பார்வைக் கோளாறுகள் (Refractive Error), குளுக்கோமா போன்ற கண் பிரச்னைகள் இருந்தால், பெரும்பாலும் தலைவலி ஏற்படும். 100-ல் 25 பேருக்கு,    கண்களில்  ஏற்படும் பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறது. அரை மணிநேரத்துக்கு ஒரு முறையேனும், இரண்டு நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு தரவேண்டும். கண்களுக்கு நல்ல ஓய்வு கொடுத்தாலே, தலைவலி வராமல் தடுக்க முடியும்.

சைனஸ்

முகத்தில் மொத்தம் எட்டு சைனஸ் அறைகள் உண்டு.  அதில் நெற்றிப்பகுதியில் இரண்டு சைனஸ் அறைகள் அமைந்துள்ளன.  சைனஸ் அறை என்பது  ஜன்னல்களைக்கொண்ட, பூட்டப்பட்ட அறை போல இருக்கும். ஏதேனும், பிரச்னையால் சைனஸ் அறை மூடினால், அறைக்குள் சளி பிடித்துவிடும். இதனால், மூக்கு, கன்னம், தலை, நெற்றி ஆகிய இடங்களில் வலி ஏற்படும். சைனஸ் பிரச்னைக்கு அலர்ஜி ஒரு காரணம். மற்றொரு காரணம், இயற்கையிலேயே மூக்கின் நடுவே இருக்கும் எலும்பு வளைந்து இருப்பதுதான்.  சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் தலைபாரம் ஏற்படும். நேராக நின்றால் தலை வலிக்காது.  ஆனால், குனிந்தால் தலைவலி ஏற்படும். சைனஸ் பிரச்னையால் ஏற்படும் தலைவலி நீங்க, மாத்திரை மருந்துகளைக் காட்டிலும், அலர்ஜியைத் தவிர்ப்பதும், யூகலிப்டஸ் தைலம் கலந்து, ஆவி பிடிப்பதும் நல்ல பலன் தரும்.

மைக்ரேன்

குறிப்பிட்ட வேலையைச் செய்யும்போது, குறிப்பிட்ட சூழலில் இருக்கும்போது, குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்ளும்போது ஏற்படும் மைக்ரேன் தலைவலியைக் குணப்படுத்த எந்தக் காரணத்தால் தலைவலி ஏற்படுகிறதோ, அதற்கு மாற்று ஏற்பாடு செய்வதே ஒரே தீர்வு. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் தலைவலி வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்குத் தொடர்ந்து  மூன்று  நாட்களுக்கு மேல் தலைவலி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேன் தலைவலி ஏற்பட குறிப்பிட்டு எந்தக் காரணங்களையும் சொல்ல முடியாது, மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, மூளையில் இருக்கும் வேதியியல் ரசாயனங்கள்  சரியான விகிதத்தில் சுரக்கவில்லை என்றாலோ, மைக்ரேன் தலைவலி வரும். மைக்ரேன் தலைவலி வம்சாவளியாக வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. மைக்ரேன் தலைவலிக்கு மருத்துவரை நாடுவது அவசியம்.

அலர்ஜி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களால் (பெர்ஃப்யூம், பெட்ரோல், சிமென்ட்) அலர்ஜி தலைவலி இருக்கும். தலைக்குக் குளிப்பது, இரைச்சல் நிறைந்த சூழலில் வசிப்பது, அதிக நேரம் குளிர்சாதன அறையில் இருப்பது, உஷ்ணப் பகுதியில் வேலை செய்வது, தினமும் குறைவான தூக்கம், காலை உணவைத் தவிர்ப்பது,  ஒவ்வாமை தரும் உணவுகளை உட்கொள்வது, மாசுபடிந்த சூழலில் வசிப்பது, காலநிலை மாற்றம், பேருந்து பயணம் போன்றவை பொதுவான காரணிகள்.

மூளையில் கட்டி

வெகு சிலருக்கு மூளையில் கட்டி (Brain tumour) உருவானால் தலைவலி ஏற்படும். மூளைப் பகுதியில் கட்டி இருந்தால், தினமும் தலைவலி ஏற்படும். காலையில் எழுந்தவுடன் தலைவலி இருந்தாலோ, தலைவலி வரும் சமயங்களில் வாந்தி வந்தாலோ, மூளையில் கட்டி இருக்கலாம். உடலின் மற்ற பாகங்களால் ஏற்படும் தலைவலியைவிட, மூளைப் பகுதியில் இருக்கும் பிரச்சனைகளால் தலைவலி வருவது அரிதாகவே இருக்கும்.

தலைவலி… தவிர்க்க வழிகள்!

முதலில் எப்போது தலைவலி ஏற்படுகிறது, அடிக்கடி தலைவலி வருகிறதா என்பதைத் தெரிந்துகொண்டு, மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகள் சாப்பிட வேண்டும்.

மருத்துவர், மூன்று நாட்களுக்கு மாத்திரை சாப்பிடச் சொன்னால், ஒரே நாளில் தலைவலி நின்றதும், உடனே மாத்திரையை நிறுத்திவிடுவது தவறு.  தொடர்ந்து மூன்று நாட்களும் மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் தலைவலி, முழுமையாகக் குணமடையும்.

மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுபவர்கள் கோலா, குளிர்பானங்கள், சிட்ரஸ் அமிலம் நிறைந்த உணவுகள், சாக்லேட், சீஸ், இட்லி, பிரெட், தோசை, மோனோ சோடியம் குளுட்டமெட் கலந்த சீன உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

தினமும் காபி அருந்தினால் தலைவலி நிற்கிறது என்று, தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காபி அருந்திக்கொண்டே இருப்பதும் தவறு.  இது சுழற்சியாக மாறி, காபி அருந்தாவிட்டால் தலைவலி ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடும்.

சிறு வயதில் இருந்தே சரிவிகித உணவை உட்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதையும், எட்டு மணி நேர முறையான தூக்கத்தையும் கடைப்பிடித்தால், தலைவலி வராமல் தடுக்க முடியும்.

தலைவலிக்கு என்ன மாத்திரை?

எப்போதேனும் வரும் தலைவலிக்குப் பொதுவாக பாரசிட்டாமல் மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். அடிக்கடி வரும் தலைவலிக்கு, குறிப்பிட்ட மாத்திரை சரியாகிவிடுகிறது என்றாலும், அதே மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. மருத்துவர் பரிந்துரையின்றி, சுயமாக மருந்துக்கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவது நல்லது அல்ல. இதனால், பல்வேறு பக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

Leave a Reply