ஏழு கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் கிட்டதட்ட ஒருகோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய புள்ளி விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு அரசு வேலையை எதிர்பார்த்து இவ்வளவு பேர் காத்திருப்பதற்கு காரணங்கள் என்ன?
காத்திருக்கும் அவ்வளவு பேருக்கும் அரசால் வேலையை உருவாக்கித் தர முடியுமா?
ஏன் இவர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ?

அரசு வேலைக்காக ஓரிரு ஆண்டுகள் காத்திருக்கலாம்.
ஆனால் ஓரேயடியாக 52 வயது வரையெல்லாம் காத்திருக்கிறார்கள்.

திருவில்லிபுத்தூரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் தனது 52ஆது வயது வயதில், சென்னை மாநகராட்சியில் காலியாக இருந்த வார்டு உதவி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 1992-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்த இவரின் கனவு நனவாகி இருக்கிறது. இவரைப்போல ஒன்றல்ல. இரண்டல்ல.

90 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இவர்களில் 45 லட்சம் பேர் பெண்கள்.

இது தவிர, பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் 31 லட்சம் பேர்.
பிளஸ் 2 முடித்தவர்கள் 22 லட்சத்து 66 ஆயிரம் பேர்.
இளநிலை கலை முடித்தவர்கள் 3 லட்சத்து 38 ஆயிரம்.
இளநிலை அறிவியல் முடித்தவர்கள் 4 லட்சத்து 42 ஆயிரம் பேர்.
பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சத்து 83 ஆயிரம் பேர்.
பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர்.

இதில், பொறியியல் பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு ஜூன் 2001ம் ஆண்டு வரையும், சிவில் என்ஜினியரிங் முடித்தோருக்கு மே 2004 வரையும், மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தோருக்கு 1999 வரையும் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்கும் அதிகரித்து வருகிறது.

இவர்கள் அனைவருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசு வேலை கிடைக்க சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
பல்வேறு அரசுத் துறைகள் தங்களுக்குத் தேவையானவர்களை தேர்வாணைய போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்கின்றன. அதனால் வேலைவாய்ப்பகத்தின் பணி முன்பைவிட தற்போது குறைந்தே இருக்கிறது.

இதனால் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் பலர், அந்தப் பணிக்கு கூடுதலான கல்வித் தகுதியோடு இருக்கின்றனர்.
காவல்துறை, தீயணைப்புத்துறை போன்றவற்றுக்கான சீருடைப் பணியாளர் தேர்வு, ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் போன்றவற்றிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது.

இவர்களில் பொறியியல் பட்டதாரிகளும் அடக்கம்.

வேலைவாய்ப்பு உள்ளதா..?

12ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் பலரும் பொறியியல் படிப்புக்கு சென்றுவிடுவதால், பிற துறைகளில் திறமையுள்ளவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்ஜினியரிங் தவிர, அனிமேஷன், பிசியோதெரபி, கடல் சார் படிப்புகள், சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், மீடியா, சுற்றுலா மற்றும் பி.ஏ. பொருளியல், பி.எஸ்சி., பி.காம்., போன்ற பல்வேறு கலை அறிவியல் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.

ஆனாலும் அரசுப்பணி மீதான விருப்பமும், உறுதியும் பலருக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வளவு பேருக்கும் வேலை என்ற வாய்ப்பை உருவாக்க முடியாத நிலையும் இருக்கிறது.

ஆண்டு தோறும் பொறியியல் படிப்பை படித்து முடிப்பவர்கள் மட்டுமே 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களாக இருக்கிறார்கள்.

இத்தனை லட்சம் பேருக்கும் அரசால் ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது சாத்தியமா?

இவர்களில் எத்தனை சதவிகிதம் பேருக்கு படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கிறது?

1997ம் ஆண்டு தமிழகத்தில் 90ஆக இருந்த, பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு நிலவரப்படி 535 ஆக உயர்ந்திருக்கிறது. 2007ம் ஆண்டில், 277 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. நான்கு ஆண்டுகளில் இது இருமடங்காக உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கை இடங்களும் இரண்டரை லட்சமாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஆண்டுதோறும் 15 லட்சம் மாணவர்கள் பொறியியல் படித்து வெளிவரும் நிலையில், இதன் எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டேகால் லட்சமாக உள்ளது.

இதில்10 சதவீதம் பொறியியல் பட்டதாரிகள் தான் உண்மையான வேலைத் திறன் பெற்றுள்ளனர் என்கிறது ஆய்வு.

மிகச் சிறந்த கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம் 95 ஆகவும், மூன்றாம் மற்றும் நான்காம் தர கல்லூரிகளில் வேலைவாய்ப்பு விகிதம், 30 முதல் 50 சதவீதமாகவும் இருக்கிறது. எனினும், 30 சதவீதம் பேர் தான் படிப்பிற்கேற்ற துறையில் வேலை பெறுகின்றனர்.20 சதவீதம் பேர் உயர்கல்விக்கும், 30 சதவீதம் பேர் சம்பந்தமே இல்லாத வேலைக்கும் சென்று விடுகின்றனர்.
ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் தனியார் நிறுவனங்கள் வேலைக்கான நேர்காணலை, வேலைவாய்ப்பகத்தில் நடத்ததுகின்றன.

அப்போது 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 1,500 பணியிடங்கள் வரை நிரப்பப்புகின்றன. இதே போல் கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டம் முடித்து வெளிவரும் லட்சக்கணக்கானோரும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இந்தப்பட்டியலை சேர்த்தால் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும்.

சுயதொழிலில் இளைஞர்கள் ஆர்வம்
படித்து முடித்து பத்து, பதினைந்து ஆண்டுகளான பின்னரும் அரசு வேலை கிடைக்கும் என காத்திருக்காமல், தங்களின் வாழ்க்கையை தாங்களே முன்னெடுத்து செல்ல முடியும் என்று ஆலோசனை கூறுகிறார்கள் தொழில் முனைவோருக்கான ஆலோசகர்கள்.

அரசு வேலைக்காக காத்திருக்காமல், சுய தொழில் மூலம் வருவாய் ஈட்டும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபடும் இளைஞர்களுக்கு எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்கின்றனர் தொழில் முனைவோருக்கான ஆலோசகர்கள்.
90 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.
இவர்களில் ஒரு சில லட்சம் பேருக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது.

மற்றவர்களுக்கு கைகொடுப்பவை தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில்கள்தான். நாட்டை வளப்படுத்த அனைத்து துறைகளுமே தேவை எனும்போது, அரசுத்துறையை மட்டுமே நம்பியிருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார்கள் மனித வள மேம்பாட்டு நிபுணர்கள்.

Leave a Reply