shadow

helmetமுடி கொட்டுது, தலை வியர்க்குது, ஹேர்ஸ்டைல் கலையுது, கழுத்து வலிக்குது, பெரிய பாரத்தைத் தலையில சுமக்கிற மாதிரி இருக்குது, சைடுல வர்ற வண்டி தெரியலை’ இவை எல்லாம் ஹெல்மெட் அணியாமல் இருக்க நாம் சொல்லும் காரணங்கள். ஆனால், ஹெல்மெட் அணிவதற்கு ஒரே ஒரு காரணம்போதும். ஒரு கணம், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முகங்களை நினைத்துப்பாருங்கள். நீங்கள் இல்லாமல்போனால், அந்த வேதனையை அவர்களால் தாங்க முடியுமா?

‘நேத்து பைபாஸ் ரோட்டுல ஒரு ஆக்ஸிடென்ட். நல்லவேளை, ஹெல்மெட் போட்டிருந்ததால தலையில எதுவும் அடி இல்லே’ என்று யாரோ ஒருவர் அடிக்கடி நம்மிடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அரசு மருத்துவமனையின் விபத்துப் பிரிவுக்குச் சென்று பார்த்தால், விபத்தின் கோரத்தையும், ஹெல்மெட்டால் உயிர் தப்பிய மனிதர்களின் கதைகளையும் ஏராளமாகக் கேட்கலாம். ஒரு செல்போன் வாங்கினால்கூட அதற்கு மறக்காமல் ஒரு ஸ்க்ராட்ச் கார்டு போடுகிறோம். மதிப்புமிக்க நம் உயிரை எத்தனை அக்கறையுடன் பாதுகாக்க வேண்டும்? ஆனால், நம் ஆட்கள் செய்வது என்ன?

சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டுவதைப் போல, ஹெல்மெட்டை வண்டியின் கண்ணாடி கம்பியில் மாட்டிக்கொள்கிறார்கள். சிலர், பேப்பர் வெய்ட் போல பெட்ரோல் டேங்கின் மீது வைத்துக்கொள்கிறார்கள். வேறு சிலர், வண்டியின் பின்பக்க லாக்கரில் பூட்டி வைத்துக்கொள்கின்றனர். தூரத்தில் போலீஸ் சோதனை செய்வதைப் பார்த்ததும் அவசர, அவசரமாக ஹெல்மெட்டை எடுத்து மாட்டிக்கொண்டு செல்கிறார்கள். இப்படி, சைக்காலஜியின் சந்துபொந்தில் நுழைந்து தப்பிக்கப்பார்க்கும் நபர்கள் இருப்பதால்தான் ‘ஹெல்மெட் அணிவது கட்டாயம்’ என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியாவில் அதிக விபத்துக்கள் நடப்பது தமிழ்நாட்டில்தான். அதில், ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக அதிகம். கடந்த ஓர் ஆண்டில் மட்டும்  6,000-க்்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாததால் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை ஹெல்மெட் அணியாததால் இழந்திருக்கிறோம் என்கிறார் தமிழக டி.ஜி.பி. மோசமான சாலைகள், போதையில் வண்டி ஓட்டும் குடிகாரர்கள் என விபத்துக்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அது நிகழும் நேரத்தில் நம்மிடம் இருக்க வேண்டிய ஹெல்மெட் என்ற பாதுகாப்புச் சாதனம் இல்லாமல் போவதால், உயிரிழப்பின் விகிதம் அதிகரித்துவிடுகிறது.

சென்னையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சைநிபுணர் ரூபேஷ் குமார் விபத்தில் ஏற்படும் தலைக்காயங்கள், விளைவுகள் குறித்து, விரிவாகப் பேசினார்.

“மனிதனின் தலையில் முக்கியப்பகுதி மூளை. அதைச் சுற்றி ஓர் உறை, அதற்கு மேல் அரண் போல மண்டை ஓடு, அதைச் சுற்றி தோல் என மூன்று அடுக்குகளாகப் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், ஓர் விபத்து நடந்து தலையில் அடிபட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, ஹெல்மெட் அணியாதபோது காயத்தின் தீவிரம் பல மடங்கு அதிகரிக்கிறது. ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு தவிர்க்கப்படும் அல்லது குறைக்கப்படும்.

அதிக வேகம்! அதிக ஆபத்து!

ஹெல்மெட் அணிந்திருப்பது பாதுகாப்புதான் என்றாலும் தினசரி பயணத்தில் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. குறிப்பாக, தமிழக சாலைகளின் நிலை குறித்து நமக்கே தெரியும். குண்டும் குழியும் நிறைந்த சாலையில் அதிவேகம் அதிக ஆபத்தைத்தான் கொண்டுவரும். நமக்கு முன்னே செல்லும் ஒரு கார், சாலையின் நடுவில் இருக்கும் பெரிய குழியை நம் கண்ணுக்குக் காட்டாது. குழியை நடுவில்விட்டு கார் சல்லென்று போய்விடும். ‘அதான் நமக்கு முன் கார் செல்கிறதே’ என்ற மிதப்பில் நாம் வேகமாகச் சென்றால், எதிர்பாராமல் குழியில் விழுந்து குப்புற சரிய வேண்டியிருக்கும்.

டூ வீலர் என்றால், 40 கி.மீ. வேகம் நார்மல். அதிகபட்சம் 60-ஐ தாண்டக் கூடாது. கார் என்றால், அதிகபட்சம் 80 கி.மீ வேகத்தைத் தாண்டக் கூடாது. இப்படிச் சொல்வதன் நோக்கம் வண்டி ஓட்டுபவரின் பாதுகாப்பைக் கருதி மட்டும் அல்ல. சாலையில் உங்கள் அருகே வண்டி ஓட்டும் மற்றவர்களின் பாதுகாப்பும் உங்கள் கையில்தான் இருக்கிறது. மனைவி பின்னால் அமர்ந்திருக்க, குழந்தையை முன்னால் அமரவைத்து, மெதுவாக வண்டி ஓட்டிச் செல்லும் ஒருவரின் அருகே, புயல்வேகத்தில் ஒரு காரோ டூ வீலரோ கடக்கும்போது அவர் ஒரு கணம் அதிர்ந்து போக மாட்டாரா? அந்த அதிர்வில் கை விலகலாம். கால் நடுங்கலாம். ஒரு விபத்தும் நடக்கலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கையை சூனியத்தில் தள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது?  

சாலைகளில் வேண்டாமே ரேஸ்!

சமீபத்தில் சென்னை, பாரிமுனையில், நள்ளிரவில் சாலையோர பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது, திடீரென சில ரேஸ் வண்டிகள் ஏறின. அந்த வேகமும் பாரமும் தாங்காமல், மூன்று பேர் உடல் நசுங்கி செத்துப்போனார்கள். அந்த இளைஞர்கள் ரேஸ் வண்டி ஓட்டியவர்கள். இது ஒருநாள் கதை அல்ல. சென்னையில் இது அடிக்கடி நடக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில்கூட பைக் ரேஸ் செல்கிறார்கள். அவர்கள் செல்லும் வேகத்தையும் வண்டியை பக்கவாட்டில் சரிப்பதையும் பார்த்தால், நமக்குக் குலை நடுங்குகிறது. கடைசியில் யாரோ சிலர் மீது விட்டு ஏற்றி உயிரைப் பறிக்கின்றனர் அல்லது பக்கத்தில் உள்ளவர்களை அச்சத்தில் உறையவைத்து விபத்தில் தள்ளுகின்றனர். பிள்ளைகளுக்கு ரேஸ் பைக் வாங்கித் தரும் பெற்றோர்கள் இதைச் சிந்திக்க வேண்டும். அதையும் தாண்டி ரேஸ் அவசியம் எனக் கருதினால், அதற்கு உரிய இடத்தில் ரேஸ் நடத்திக்கொள்ள வேண்டும்.

குடி ஆட்டம்!

உடல் சமநிலையில் இருக்கக் காரணம் சிறுமூளை (செரபெல்லம்). குடித்த பிறகு, சிறுமூளையில் பாதிப்புகள் ஏற்படுவதால், தள்ளாட்டம் ஏற்படுகிறது. வண்டியை ஆக்ரோஷமாக ஓட்டத் தூண்டுவது சிறுமூளையின் பாதிப்பினால்தான். 70 சதவிகித விபத்துகளுக்கு, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதுதான் காரணம். ஆனால் யார் கேட்கிறார்கள்? இரவு 10 மணிக்கு மேல் வண்டியோட்டிகளை மறித்து, ஊதச் சொன்னால் நிறையப் பேரிடமிருந்து போதைக்காற்றுதான் வருகிறது. உடலும் மனமும் அலைபாய்ந்து, எங்காவது ஏற்றி மடிகின்றனர் அல்லது யார் மீதாவது மோதிவிட்டு, தான் செய்தது இன்னதென்று தெரியாமல் மயங்கிக்கிடக்கின்றனர்.

செல்போன் எமன்!

‘வார்த்தைகள் கொல்லக்கூடும். வண்டி ஓட்டும்போது போன் பேசாதீர்கள்’. ‘அழைப்பது எமனாகவும் இருக்கலாம். வண்டி ஓட்டும்போது செல்போனை எடுக்காதீர்கள்’ – என விதவிதமாக விளம்பரம் செய்துதான் பார்க்கிறார்கள். ஆனால், இயர்போன் மாட்டிக்கொண்டு பேசுவது, ஹெல்மெட்டுக்கும் காதுக்கும் இடையிலான இடுக்கில் செல்போனை செருகிவைத்துப் பேசுவது எனப் பல நூதன முறைகளை நம் ஆட்கள் கையாள்கின்றனர். ஹெல்மெட் போடாதோர் கழுத்துக்கும் காதுக்கும் இடையில் செல்போனை வைத்து ஒரு பக்கமாகச் சாய்ந்துகொண்டே வண்டியை ஓட்டி, சாலையில் செல்லும் மற்றவர்களைக் கலவரப்படுத்துகின்றனர். வண்டி ஓட்டும் போது ப்ளூடூத் மாட்டிப் பேசுவது அந்த நேரத்து வசதியாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அது கவனச் சிதறலை ஏற்படுத்தி விபத்துக்கு வழிவகுக்கும்.

ஹெல்மெட் அணிந்தால் முடி கொட்டுமா?

இப்படித்தான் பலர் சொல்கிறார்கள். ஆனால், இது முழுப் பொய். பொதுவாக நம் தலையில் தினசரி சில முடிகள் வளரும், சில முடிகள் உதிரும். ஹெல்மெட் அணியும்போது உதிரும் முடிகள் அதில் ஒட்டிக்கொள்வதால், பலரும் அந்தப் பழியை ஹெல்மெட் மீது போட்டுவிடுகின்றனர். உண்மையில், ஹெல்மெட் அணிவதன் மூலம் அலர்ஜி, கண் பாதிப்பு போன்றவற்றைக்கூட தடுக்க முடியும்.

முக்கியமாக, ஹெல்மெட்டை நேரடியாகத் தலையில் அணியாமல், நல்ல பருத்தித் துணியைத் தலையில் கட்டிய பிறகே அணிய வேண்டும். அப்படித் தலையில் கட்டும் துணியை, அடிக்கடி சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். நீண்ட நாட்கள் துவைக்காமல் ஒரே துணியை பயன்படுத்தினால் வியர்வை, அழுக்கு சேர்ந்து தலை அரிக்கும்; பொடுகு வரும். ஹெல்மெட் பயன்படுத்துபவர்கள், வாரம் மூன்று முறை மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிப்பது நல்லது. வாரத்துக்கு இருமுறை, ஹெல்மெட்டைத் திருப்பி, உட்புறம் வெயிலில் படுமாறு ஒரு மணி நேரம் வைத்தால் உள்ளே கிருமிகள் தங்காது. அதேபோல ஒருவர் பயன்படுத்தும் ஹெல்மெட்டை மற்றொருவர் பயன்படுத்தக் கூடாது.

பொதுவாக மனிதர்களுக்கு தலைக்கனம் தேவையற்றது. தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால், இந்த ‘தலைக்கனம்’ நல்லது. எல்லோருக்கும் தேவையானது!


சட்டம் என்ன சொல்கிறது?

ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்புறம் அமர்ந்திருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.அப்படி அணியவில்லை என்றால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வண்டியின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். நல்ல தரமான ஹெல்மெட் வாங்கியதற்கான ரசீதைக் காண்பித்த பின்னரே, அவை திருப்பித் தரப்படும். மீண்டும், ஹெல்மெட் அணியாமல் இருந்தால், ஒட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

கார் ஓட்டுபவர், சீட் பெல்ட் அணியாவிட்டால், 100 ரூபாய் அபராதம்.

எது நல்ல ஹெல்மெட்

தலைக்கு மட்டும் அணியும் ஹெல்மெட் பாதுகாப்பற்றது. தாடைப் பகுதியையும் மறைக்கும் ஹெல்மெட்தான் சிறந்தது.

ஃபைபர், பாலிகார்பனேட் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் ஹெல்மெட்டின் உட்பகுதியில், ஃபைபர் கண்ணாடி, ஃபிட்டிங்க்ஸ், ஸ்குரூ போன்ற அனைத்தும் சரியாகப் பொருந்தியிருக்கும். ஒருவேளை தலையில் அடிபட்டாலும் இவை பாதுகாக்கும்.

ஃபைபர், வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. பாலிகார்பனேட் ஹெல்மெட்கள் திடமானவை. இவை இரண்டும் தலைப்பகுதியைப் பாதுகாக்கும்.

 

பெண்களுக்கு, ஆண்களுக்கு எனத் தனித் தனி ஹெல்மெட் கிடையாது. தலைக்குத்தான் ஹெல்மெட். ஆகையால் அழகு, நிறம், தோற்றம் போன்ற காரணங்களுக்காக, பாதுகாப்பில்லாத ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது தவறு.

ஐ.எஸ்.ஐ முத்திரை போலிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது. கடைகளில் விற்கப்படும் ஹெல்மெட்களை அணிந்துபார்த்து, அதன் உறுதித்தன்மையைப் பரிசோதித்த பி்றகு வாங்கலாம்.

கேப் வகை ஹெல்மெட், தலை மற்றும் காதுகளை மட்டும் பாதுகாக்கும் ஹெல்மெட், பிளாஸ்டிக் ஹெல்மெட் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இவை பாதுகாப்பானவை அல்ல.

இரவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது, கறுப்பு நிற ஹெல்மெட்களைவிடவும் ஃபுளோரசன்ட் நிற ஹெல்மெட்களே பாதுகாப்பானவை. இரவில், எதிரிலோ பின்புறமோ வேகமாக வரும் வண்டியோட்டிக்கு ஃபுளோரசன்ட் வண்ணம் நன்றாக கண்ணுக்குத் தெரியும் என்பதால், விபத்து தவிர்க்கப்படும்.


தலைக்காயத்தின் வகைகள்

எக்ஸ்ட்ராடியூரல் ஹெமடோமா (Extradural haematoma)

மூளைக்கும் மண்டை ஓட்டுக்கும் இடையில் இருப்பது மூளை உறை. விபத்தில் அடிபடும்போது  மண்டை ஓடு உடைந்தால், மூளை உறையில் இருக்கும் ரத்தக் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு ரத்தம் கசியும். அளவுக்கு அதிகமாக ரத்தம் கசியும்போது, மூளையின் மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதனால், மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் துண்டிக்கப்பட்டு, மூளை செயல் இழந்துவிடும். இதைத்தான் ‘மூளைச்சாவு’ என்கிறோம். பாதிப்பு ஏற்பட்ட சில மணி நேரங்களுக்குள் அறுவைச்சிகிச்சை செய்து மூளைக்குச் செல்லும் அழுத்தத்தைக் குறைக்காவிடில் உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஹெல்மெட் அணியும்போது, மண்டை ஓட்டுக்கு ஏற்படும் பாதிப்பை அது தாங்கிக்கொள்ளும் என்பதால், இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும்.

கூ அண்ட் கான்ட்ராகூ (Coup-Contrecoup Injury)

விபத்தில் சிக்கியவர்கள், பெரும்பாலும் இந்தக் காயத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். விபத்தில் தலை வேகமாக ஒரு பொருளின் மீது மோதும்போது, அதன் தாக்கம் காரணமாக மூளையின் எதிர்புறம் பாதிக்கப்படும். அதாவது, மோதும்போது தலையின் முன்பக்கம் அடிபட்டால், பின்பக்க மூளை பாதிக்கப்படலாம். அடிபட்ட இடமும் அடிபடாத இடமும் சேர்ந்து, பாதிக்கப்படும் சிக்கலான காயம் இது.

டிப்ரஸ்டு ஃப்ராக்சர் (Depressed  Fracture)

கூர்மையான பொருள் ஏதேனும் மண்டை ஒட்டைத்  தாக்கினால், மண்டை ஓட்டின் எலும்புகள் நொறுங்கி, மூளையைக் குத்திக் கிழித்துவிடும். இதனால் மூளையில் சீழ் பிடிக்கும்.

மண்டை ஓடு சார்ந்த முறிவுகள் (Skull based fractures)

மண்டை ஓட்டின் அடிப்பகுதி உடைந்தால் மூளை உறை, மூளைத்தண்டு இரண்டும் கிழிந்து, மூளையில் சுரக்கும் செரப்ரோஸ்பைனல் (Cerebrospinal fluid)  என்ற திரவம்  மூக்கு, காது வழியாக ரத்தத்துடன் வெளியேறும். திரவம் மட்டுமின்றி காது, மூக்கு போன்றவற்றில் இருக்கும் அழுக்குகள்கூட மூளையைப் பாதித்து, மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும். இதற்கு உடனடி சிகிச்சை மிக முக்கியம்.

Leave a Reply