shadow

பெங்களூரில் கனமழை-பெருவெள்ளம். தீவுபோல் ஆனதால் பொதுமக்கள் தவிப்பு

bangalore rainகடந்த ஆண்டு சென்னையில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு சென்னையே மிதந்ததுபோல் இந்த ஆண்டு பெங்களூரில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று பெங்களூர் நகரமே தீவுபோன்று காட்சி அளிக்கின்றது. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு, ராம்நகர், மண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் கடந்த சில தினங்களாக இரவுபகலாக மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய சாலை பகுதியில் 1.6 செமீ மழையும், பெங்களூரு நகர பகுதியில் 4 செமீ மழையும் பதிவாகியுள்ளது.. 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரே இரவில் இவ்வளவு பெரிய மழை நேற்றுதான் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக‌ சிவாஜிநகர், கெங்கேரி, பனசங்கரி, பசவன்குடி, பாபுஜிநகர், பிலேகாஹள்ளி, பழைய விமான நிலைய சாலை, எஸ்எஸ்ஆர் லே அவுட் ஆகிய பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. 6 இடங்களில் பழைய கட்டிடங்களும், சாலையோரம் இருந்த 120 மரங்களும் சாய்ந்தன. பிடிஎம் லே அவுட், கோடிசிக்கன‌ஹள்ளி, பெல‌க்கனஹள்ளி, பன்னார்கட்டா சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட‌ வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.

எலெக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாப்பூர் சாலை, ஓசூர் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சாலையிலே தவிக்கும் நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply