shadow

ramdossவேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி முன்னாள் அமைச்சர் ஒருவரின் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிகாரியின் மிரட்டலுக்கு அமைச்சர் ஒரு காரணமா என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தேகம் எழுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
” தமிழ்நாடு மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குனராகவும், மாநில காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனராகவும் பணியாற்றி வந்த மருத்துவர் அறிவொளியின் உடல் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சென்னை மெரினாவில் கரை ஒதுங்கியது. புற்றுநோயால் அவர் பாதிக்கப் பட்டிருந்ததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியாகும் தகவல்கள் அவரது மரணத்தில் ஐயத்தை எழுப்புகின்றன.

மருத்துவர் அறிவொளி கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 5 பணிகளிலும், ஏற்கனவே இருந்த பணிகளிலும் 687 பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன. இதற்கான ஆள் தேர்வுகள் முறையாக நடைபெற வேண்டும் என்று விரும்பிய அறிவொளி, மாவட்ட வாரியாக பணியாளர்களை நியமிக்க ஊட்கங்களில் விளம்பரம் கொடுத்தார். இவரது அறிவுரைப்படி தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறைப்படி நேர்காணல் நடத்தி 3 பணியாளர்களை தேர்வு செய்து பணி ஆணைகளை வழங்கினார்.

இந்த பணியிடங்கள் ஒவ்வொன்றுக்கும் சுமார் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயித்து மொத்தம் ரூ.20 கோடி ஊழல் செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குனர் முறையாக நேர்காணல் நடத்தி பணியாளர்களை நியமித்ததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர், அந்த பணி நியமனங்கள் அனைத்தையும் ரத்து செய்ததுடன், சம்பந்தப்பட்ட துணை இயக்குனரை தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ததாகவும் தெரிகிறது.

காசநோய் திட்டத்திற்கான ஆள் தேர்வுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, அனைத்து பணியிடங்களும் மாநில அளவில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. போட்டித்தேர்வு மற்றும் நேர்காணலில் முறைகேடு செய்து பணம் தந்தவர்களுக்கு வேலை வழங்குவது தான்  திட்டம் என்று கூறப்படுகிறது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அறிவொளி, இப்பணிக்கு அதிக அனுபவம் தேவை என்பதால்,  ஏற்கனவே இத்திட்டத்தில் களப்பணியாளர்களாக இருப்பவர்களில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களை கலந்தாய்வு முறையில் நியமிக்கலாம் & மீதமுள்ள இடங்களை மற்ற மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் முறைப்படி நியமிக்கலாம் என்று பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்காத மேலிடம்  அறிவொளியை கடுமையாக மிரட்டியதாகவும், அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல்  அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் அவருக்கு நெருக்கமானோர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.

வேளாண்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்ட அதே காலக்கட்டத்தில் அறிவொளியின் தற்கொலையும் நடந்திருப்பதால் இக்குற்றச்சாற்றை முற்றாக ஒதுக்கிவிட முடியவில்லை.

அறிவொளியின் மரணத்திற்குப் பிறகு கடந்த மாத இறுதியில் காசநோய் திட்ட பணியாளர் பணிக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வு முடிவடைந்த பிறகு அதில் பங்கேற்றவர்களை தொடர்பு கொள்ளும் சிலர், பணம் கொடுத்தால் வேலை உறுதி என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கும்போது இக்குற்றச்சாற்று மேலும் வலுவடைகிறது. ரூ.20 கோடி ஊழல் செய்வதற்கு அறிவொளி தடையாக இருந்ததால் ஆத்திரமடைந்த மேலிடம், அவரை மிரட்டியிருக்கலாம்; அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுவதை நம்புவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

ஊழலுக்குத் தடையாக  இருக்கும் அதிகாரிகள் எல்லாம் அமைச்சர்களின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொள்வது  மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும். இத்தகைய போக்கு தொடர்ந்தால் தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் எவருமே இருக்க மாட்டார்கள்; ஊழல் அமைச்சர்களும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளும் மட்டும் தான் கோலோச்சுவார்கள் என்ற அவமானகரமான சூழல் ஏற்பட்டு விடும்.
காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் அறிவொளியின் தற்கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மங்களை விளக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.

எனவே, இதுகுறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்ய வசதியாக சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply