மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்களின் கார்களை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை மாநில சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி விருது மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு திருவள்ளுவர் நகரில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் பங்கேற்க சமூகநலத்துறை அமைச்சர் ராஜவேலு வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட மாற்றுத் திறனாளிகள் கருப்பு கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து காவல்துறையினர் மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி, அமைச்சரை நிகழ்வு நடைபெறும் அரங்கினுள் அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது.

இந்த பதற்றம் தணிந்து கொண்டிருந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதே நிகழ்வில் பங்கேற்க வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் மீண்டும் மாற்றுத் திறனாளிகள் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து முத்தியால்பேட்டை காவல்துறையினர் முதலமைச்சர் ரங்கசாமியை பாதுகாப்பாக விழா அரங்கினுள் அழைத்து சென்றனர்.

இது குறித்து மாற்றுத் திறனாளிகள் கூறியதாவது:
புதுவை மாநில மாற்றுதிறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாதா மாதம் வழங்கப்படும் இலவச அரிசியை உரிய நேரத்தில் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கென உள்ள செல்போன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் எங்கள் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவேதான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கார்களை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் நடைபெற்ற விழாவில் 300க்கும் மேற்பட்ட மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ரங்கசாமியிடமிருந்து பெற்றுக் கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட மாற்று திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் வெளியேறினர்.

 

Leave a Reply