தென்மாவட்டங்களில் நடைபெறும் குரு பூஜை நிகழ்ச்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து, குருபூஜைகளுக்கு தடை கேட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். சென்னை, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் வாராகி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், தென்மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக சாதியின் அடிப்படையில் குரு பூஜை, ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளினால் சாதி கலவரம் ஏற்படுகிறது. இதனால், கடந்த 3 ஆண்டுகளில் 29 பேர் இறந்துள்ளார்கள். 336 பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
368 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த குரு பூஜை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் பெரும் அளவு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால், அவர்கள் வழக்கமான சட்டம்-ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தமிழகத்தில் ஏற்படுகிறது எனவே சாதி அடிப்படையில் நடைபெறும் குருபூஜைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழக காவல்துறை நிர்வாக பிரிவு ஐ.ஜி. டி.பி.சுந்தரமூர்த்தி தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது
கடந்த சில ஆண்டுகளாக இமானுவேல் சேகரன் மறைவு தினத்தை, தலித் சமுதாய அமைப்பினர் பரமகுடியில் ஒன்றுகூடி குருபூஜை நடத்தி வருகின்றனர். அப்போது, ஒவ்வொரு ஆண்டும், கல்வீச்சு உள்ளிட்ட சில நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். 2009 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில், சட்டம்- ஒழுங்கை நிலைநாட்ட போலீசார் வேறு வழியின்றி அவர்கள் மீது பலப்பிரயோகம் செய்தனர்.அதேபோல கடந்த ஆண்டு நடந்த தேவர் குரு பூஜையிலும், பதற்றமான சூழ்நிலை நிலவியது. பரமகுடி அருகே இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.பொன்னையாபுரம் அருகே குருபூஜைக்கு சென்றவர்கள் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அவனியாபுரம் அருகே சென்ற கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகளினால், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது கலவரம் ஏற்படாமல் தடுப்பதற்காக தகுந்த தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது.வாகனங்களின் கூரையில் அமர்ந்துகொண்டு நிகழ்ச்சி வருவது, கோஷங்கள் எழுப்புவது, பேனர்கள் வைப்பது, வெடி வெடிப்பது போன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது.குருபூஜை நடைபெறும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்ட பாதைகளின் வழியாக மட்டுமே ஊர்வலக்காரர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தனி சாலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. பதற்றமான இடங்களின் வழியாக ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான கட்டுப்பாட்டினால், இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று 150 வாகனங்கள் மட்டுமே வந்தது. சுமார் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இதன்மூலம் இந்த நிகழ்ச்சி, எந்த விதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல், அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. இதுபோன்ற கடுமையான கட்டுப்பாடு, எதிர்வரும் காலங்களிலும் கடை பிடிக்கப்படும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் வாடகை வாகனங்களில் நுழைய 2 மாதங்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் 8-9-2013 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தேவர் குரு பூஜையின் போதும் இந்த உத்தரவு அமலில் இருக்கும்.இந்த குரு பூஜைகளின்போது, சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். மனுதாரர் கூறுவதை போல ஒட்டுமொத்தமாக குருபூஜை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க முடியாது. இந்த நிகழ்ச்சிக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படும். எனவே இந்த ஐகோர்ட்டு இந்த வழக்கில் தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *